‌புது வாகனம் வாங்கும் போதும், எண் பதிவின் போதும் செய்ய வேண்டியது என்ன?

திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:45 IST)
வாகனம் வாங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தம்பதியர் என்னிடம் ஆலோசனை கேட்டனர். அவர்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்ததில், மனைவிக்கு ஏழரை சனி நடைபெறுவதும், கணவருக்கு அர்த்தாஷ்டம சனி நடப்பதும் தெரிந்தது.

இதுபோன்ற காலத்தில் புது வாகனங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறி வாங்கினாலும் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும். எனவே, தம்பதிகளின் பெயரில் வாகனம் வாங்காமல் நெருங்கிய உறவினர் பெயரில் புதிய வாகனத்தை வாங்கி பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினேன்.

நம்பத்தகுந்த நெருங்கிய உறவினர் என்று தங்களுக்கு யாரும் கிடையாது எனத் தெரிவித்த அந்த தம்பதிகள், சுமார் 10 லட்சம் மதிப்புள்ள ஒரு வாகனத்தை அடுத்தவர் பெயரில் பதிவு செய்வது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்றும் தங்கள் தரப்பினை தெரிவித்தனர்.

சரி பரவாயில்லை என்று கூறிவிட்டு அவர்களது ஜாதகத்தை மீண்டும் ஆராய்ந்து வலுவாக உள்ள கிரகங்களுக்கு உரிய மாவட்டத்தில் (ஒவ்வொரு மாவட்டம், மாநிலம், தேசத்திற்கும் உரிய கிரகங்கள் உண்டு) யாராவது தெரிந்த நபர் இருந்தால், அவரது முகவரியைக் கொடுத்து உங்கள் பெயரில் வாகனத்தைப் பதிவு செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினேன்.

இதுவும் இல்லாவிட்டால் அடுத்த மாநிலத்தில், உதாரணமாக புதுச்சேரியில் வாகனப் பதிவை வைத்துக் கொள்ளுங்கள், சனியின் பாதிப்பு ஓரளவு குறையும் என்றும் தெரிவித்தேன். இதையடுத்து இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட அந்த தம்பதிகள் மகிழ்ச்சியாக விடைபெற்றனர்.

தசா புக்தியை கணக்கிட்டு...

பொதுவாக வாகனம் என்பது மனித வாழ்க்கையில் முக்கியமான விஷயமாகும். அத்தியாவசியமானதும் கூட. ஆனால் அதே வாகனம் உயிருக்கும் ஆபத்தை விளைக்கும் வல்லமை கொண்டது. எனவே தான் எந்த தசா புக்தி நடைபெறுகிறது என்பதை கணக்கிட்டு வாகனம் வாங்கலாம்.

ஒருவேளை தவறான தசா புக்தி அல்லது ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி நடைபெறும் போது வாகனம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர்களது ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ, அந்த மாவட்டம், மாநிலத்தில் வாகனப் பதிவை மேற்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறுவேன். இதில் தவறு இல்லை.

வாகனப் பதிவும் நியூமராலஜியும் :

வாகனங்களை பதிவு செய்யும் போது நியூமராலஜியையும் (எண் ஜோதிடம்) கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொருவருக்கும் பிறவி எண், விதி எண் என்பது இருக்கும். அதற்கு ஏற்றவாறு அல்லது அந்த எண்களுக்கு உரிய நட்பு எண்கள் இருக்கும் வகையில் வாகனத்தின் நம்பர் பதிவை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

உதாரணமாக ஒருவர் 3ஆம் தேதி பிறந்திருக்கிறார் என்றால், 3 என்பது விதி எண், 4 என்பது பிறவி எண். இதற்கு ஏற்றவாறு, நட்பு எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.

வாகனத் தேர்வில் வண்ணத்தின் முக்கியத்துவம் :

அடுத்ததாக ஒரு வாகன நம்பரின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை 8 என்று வருவதாக எடுத்துக் கொண்டால் அது சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும். சனியின் நிறம் நீலம் (எந்த விதமான நீல நிறமும்), சனியின் நட்பு கிரகமான புதன், சுக்கிரனுக்கு உரிய கிரே, பச்சை, ரோஸ், பிங்க் ஆகிய வண்ணங்களில் வாகனத்தை தேர்வு செய்யலாம்.

ஆனால் சனியின் பகை கிரகம் செவ்வாயின் நிறமான சிகப்பு வண்ணத்தில் 8 என்ற கூட்டுத் தொகை வரும் எண் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது. அப்படிப் பதிவு செய்தால் அந்த வாகனம் ஏராளமான விபத்துகளை சந்திக்கும்.

எனவே புதிதாக வாகனம் வாங்கும் முன்பாக என்ன திசை நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஜாதகருக்கு சிறப்பான திசை இல்லையென்றால், அவரது வீட்டில் உள்ள யாருக்கு நல்ல திசை நடந்தாலும் அவர்கள் பெயரில் வாங்கலாம். எனவே, நல்ல திசை நடக்கும் நபரின் பெயரில் வாகனத்தைப் பதிவு செய்வது நல்லது. இதில் கவுரவம் பார்க்கக் கூடாது.

உதாரணமாக கணவருக்கு கிரக நிலை சரியில்லாத காலத்தில், அவரது மனைவிக்கோ, மகனுக்கோ நல்ல கிரக நிலை இருந்தால் அவர்களின் பெயரில் வாங்கலாம். இதன் மூலம் விபத்துகளை தவிக்க முடியும்.

ஒருவரது பெயரில் வாகனத்தை பதிவு செய்த பின்னர், அவருக்கு கெட்ட நேரம் ஏற்படும் போது என்ன செய்யலாம்?

இது போன்ற கவலையே வாசகர்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் வாகனத்தை வாங்கும் நேரம் தான் முக்கியம். அதனை சொந்தமாக்கிய பிறகு பதிவுதாரரின் ஜாதக நிலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அந்தப் புதிய வாகனத்தை நல்ல நாளில் ஓட்டத் துவங்கி விட்டால் எதிர்காலத்திலும் அந்த வாகனம் சிறப்பான பலனைத் தரும்.

புராண கால நூல்களில் குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். ஏனென்றால் ஜாதகரின் கிரக நிலையை அறிந்து, நல்ல நாளில் குதிரையேற்றம் மேற்கொண்டால், அந்த குதிரை அவருக்கு மிகவும் உறுதுணையாக கடைசி வரை நிலைத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்