காணாமல் போவது பற்றி கூறுங்கள்?

புதன், 9 ஜூலை 2008 (10:44 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

காணாமல் போவது, ஓடிப்போவது, சொல்லாமல் போய் தற்கொலை செய்து கொள்வது என்பது எல்லாமும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடங்களுக்குரியவன் தசா புக்தி எல்லாம் வரும்போது சாதாரணமாகவே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட, “எங்கயாவது ஓடிப் போய்விடுவேன” என்று கூறுவார்கள். இதை எல்லாம் நாங்கள் பார்த்துள்ளோம்.

அன்யோன்யமான தம்பதிகள் கூட, சிறு சிறு சண்டைகளில், “எங்கயாவது ஓடிப் போய் விடலாம” என்று இருக்கிறது, “ஒரு நாள் பாருங்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடுவேன” என்று கூறுவார்கள்.

கடத்தப்படுவதும் உண்டு. தற்போது சமீபத்தில் கூட ஒரு பையன் கடத்தப்பட்டான். அதற்குக் காரணம் சனி தசை. ஏழரை சனி, கேது புக்தி, ராகு அமர்ந்தார். அந்த பையன் கடத்தப்பட்டான்.

பிரிந்து செல்லுதல்... கெட்ட தசைகள் வரும்போது தானாகவே பிரிந்து செல்வார்கள். அதாவது வேலை நிமித்தமாக பணியிட மாறுதல் போன்று குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு எங்காவது வாழ்வார்கள். அதுபோலவும் நடக்கும்.

இது எல்லாமே தசா புக்திகளின் காரணத்தால் தான் நடக்கிறது.

லக்னாதிபதிக்குரியவனும், ஆயுள் காரகனும், 3க்குரியவனும் பலவீனமாக இருந்து லக்னாதிபதியுடைய தசையில் 3க்குரியவனோ அல்லது 6க்குரியவனோ வரும்போது கடத்தப்படுதல், காணாமல் போவது, வழி தவறிப் போவது, திசை மாறிப் போவது போன்றவைகள் நடக்கும்.

ஜாதகம் வலுவாக இருந்தால் இதுபோன்றவற்றில் சதவீதம் குறைவாக இருக்கும்.

இரண்டு பேருந்து ஒன்று போல இருந்தது, ஏறி உட்கார்ந்து போய் இறங்கிய பிறகுதான் தெரிந்தது அது கோயம்பத்தூருக்குப் போகும் பேருந்து என்று. நான் சென்னைக்குப் போக வேண்டிய பேருந்தில் ஏறுவதாக நினைத்து தவறி இதில் ஏறிவிட்டேன் என்றெல்லாம் சொல்லுவார்கள். இதெல்லாம் அப்படிப்பட்ட தசா புக்திகளில் நிகழ்வதுதான்.

ஒரு சிலரின் ஜாதகங்களில் காணவில்லை என்பது ஒரு சில மணி நேரங்கள் நடக்கும், ஒரு சிலருக்கு ஒரு சில நாட்கள், ஒரு சில மாதங்கள் நடக்கும். அது அது அவர்களது தசா புக்திகளை வைத்து வேறுபடும்.

இதை எல்லாம் ஜாதகத்தில் கண்டுபிடித்துவிடலாமா?

நூறு விழுக்காடு கண்டுபிடித்து விடலாம். காணாமல் போகக்கூடிய ஜாதகங்கள் வருகின்றனவே.

சில ஜாதகங்கள் வரும்போது, பெற்றவர்களிடம் சொல்லியே அனுப்புகிறோம். தற்போது காணாமல் போகக்கூடிய காலம். எனவே எங்கு போனாலும் கையிலேயே பிடித்துக் கொண்டு போங்கள். விளையாடுகிறான் என்று விட்டுவிடாதீர்கள். கண்காணித்துக் கொண்டே இருங்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

பள்ளிக்கு நீங்களே கொண்டு சென்று விட்டு கூட்டிக்கொண்டு வாருங்கள். வீட்டின் வேலைக்காரியை மாற்றுங்கள். அவர்கள் மூலமாகக் கூட கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்