தமிழகத்திற்கு நிலநடுக்க அபாயம் உண்டு- ஜோதிடம்!

திங்கள், 7 ஜூலை 2008 (14:05 IST)
புவியியல் ஆய்வாளர்கள் தமிழகத்திற்கு நிலநடுக்க ஆபத்து உண்டு என்று கூறியுள்ளனர். ஜோதிட ரீதியாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

தமிழகத்திற்கு நிலநடுக்க அபாயம் உண்டு. இந்த ஆண்டிற்கான பொதுப் பலனிலேயே அதுபற்றிக் கூறியுள்ளோம். அதாவது இந்த சர்வதாரி ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும், மே முதல் ஆகஸ்ட் வரை, ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டங்களில் ஆட்சி மாற்றங்கள், தலைவர்களின் மறைவு, தீவிரவாதிகள் தாக்குதல், இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, பங்குச் சந்தை சரிவை சந்திக்கும் என்பதையெல்லாம் கூறியுள்ளோம்.

இயற்கை சீற்றம் என்று குறிப்பிட்டுள்ளதில் நிலநடுக்கம் என்பது அடங்குமா?

இதில் குறிப்பிட்ட இயற்கைச் சீற்றத்தில் நிலநடுக்கம் என்பது நிச்சயம் உண்டு.

அதாவது நான் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது நூற்றுக்கும் மேற்பட்ட நிலநடுக்கம் நடந்த தேதி, மாதம் மற்றும் அப்போதயை கிரக அமைப்பையும் எடுத்து ஆய்வு செய்துள்ளேன்.

அதன்படி, சனி, செவ்வாயின் சேர்க்கை, சனி, செவ்வாயின் பார்வை போன்றவை இருக்கும்போது நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்துள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் தேதி செவ்வாய் கிழமை சனியும் செவ்வாயும் ஒன்று சேர்ந்தது. இது ஆகஸ்ட் 12 வரை இருக்கும். அதனால் இந்த நேரத்தில் நிலநடுக்கம், அரசியல் மாற்றம், தலைவர்கள் மரணம் போன்றவை நடக்க வாய்ப்புகள் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்