இந்தியா வல்லரசாகுமா?

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:27 IST)
ஜோதிடப்படி இந்தியாவிற்கு எதிர்காலம் சரியாக இல்லை. உலகத்தில் இருக்கக் கூடிய பணக்காரர்களில் 5 கோடி பேர் இங்கே இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் என்று பதிலளித்தார் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்.

தற்போது இந்தியாவிற்கு சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. நல்ல தசைதான். ஆனால் ஒரு பக்கம் சுக்ர தசை நடந்தாலும், கடக ராசிக்கு அது பாதகாதிபதி.

அதாவது கடக ராசிக்கு ஒரு நல்ல வீட்டிற்கும், ஒரு கெட்ட வீட்டிற்கும் உரியவன் சுக்கிரன்.

அதனால்தான் நல்லது நடப்பது போல் சிலது தெரிகிறதே தவிர, நல்லது நடப்பதே இல்லை. சுக்கிரன், பாரம்பரிய தொழில்களை அழிப்பவன். பாரம்பரிய தொழில்கள் மட்டுமல்லாமல், கலைகள், மூலிகைகள், சொத்துக்கள், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும் அழிப்பவன்.

இதன் தாக்கத்தை பிறகுதான் மக்கள் உணர்வார்கள். உதாரணத்திற்கு சுக்கிர தசை வந்த பிறகு பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது. தனி மனித வருமானம் உயர்ந்துள்ளது.

ஆனால் அதே சமயம் மற்றொருபுறம், விவாகரத்து அதிகமாகிவிட்டது. தனி மனித ஒழுக்கம் குன்றிப்போய்விட்டது.

ஒழுக்கம், கற்பு என்றால் என்னவென்று புதிய விளக்கம் சொல்லும் அளவிற்கு நமது இந்திய பாரம்பரியம் மாறிவிட்டது.

இதற்கெல்லாம் சுக்கிரன் தான் காரணம். அதாவது சீரழிவு, வளங்கள் என்று இரண்டையுமே செய்கிறது. இரண்டையும் கணக்கிட்டால் சீரழிவுதான் அதிகமாக இருக்கும். சீரழிந்த நமது கலாச்சாரத்தை மீண்டும் நிலைநாட்டுவது மிகக் கடினம்.

ஆயுத வல்லரசு என்பது பற்றி?

ஆயுத வல்லரசு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சுக்கிரன் அதனைச் செய்யும். எல்லாம் தன்னிடம் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கும். அதோடு பயங்கரவாதம், கற்பழிப்பு, திருட்டு போன்றவையும் இருக்கும். கடக ராசிக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கும்.

கடக ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். திட்டமிடுவார்கள்.

அதேப்போலதான் இந்தியா பாதுகாப்பின் பொருட்டு ஆயுதங்களை வாங்குதல், விற்றல் போன்றவற்றில் ஈடுபடும்.

அந்த ஆயுதத்தினால் இந்தியாவிற்கும் ஆபத்து உண்டாகும். ஒரு சில ஆயுத பலத்தினால் பொருளாதாரத் தடைகளும் ஏற்பட்டன. அதுபோல வருங்காலத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்