மோடி நிச்சயம் ஜெயிப்பார் என்று எப்படி உறுதியாக கூறினீர்கள்?
சனி, 5 ஜனவரி 2008 (16:37 IST)
மோடி நிச்சயம் ஜெயிப்பார் என்று தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னரே கூறியவர் நீங்கள். வாக்குப்பதிவுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரும் அவரே ஆட்சியில் அமர்வார் என்று உறுதியாக கூறினீர்கள். அப்படியே நிகழ்ந்தும் விட்டது. இதை எப்படி உறுதியாக கூறினீர்கள்?
அவருடைய பிறந்த தேதியை வைத்தே கணக்கிட்டோம். அவருடைய துல்லியமான ஜாதகம் கிடைக்கவில்லை. துல்லியமான ஜாதகம் கிடைத்திருந்தால் வெற்றி பெறும் தொகுதிகளைக் கூட சொல்லியிருக்கலாம். இவை அனைத்துமே கிரக அமைப்பைக் கொண்டே கணக்கிட்டிருக்கிறோம்.
குஜராத் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பது குறித்து கண்டறிய, இந்தியாவின் ஜாதகத்தையும், மோடியின் ஜாதகத்தையும் கணக்கிட்டோம்.
இந்தியாவின் ஜாதகத்தில் தற்போது சனியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எப்போதும் ஒரு நாட்டை சனி ஆட்சி செய்யும்போது, அங்குள்ள ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகள்தான் வெற்றிபெறும். சனி ஆட்சியில் இல்லாமல் இருந்தால் ஆளும் கட்சிகள்தான் வெற்றி பெறும்.
குஜராத் மட்டுமின்றி, இமாச்சலப்பிரதேசத்திலும் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ராசி வலுவான ராசி. விருச்சிகம் என்பது தேள். ராஜா ராஜ சோழன் முதல் விருச்சிக ராசிக்காரர்களைத்தான் தூதர்களாக அனுப்புவர். விருச்சிக ராசிக்காரர்கள் தூது செல்வதில் வல்லவர்கள். தூது போவது என்றால் சமயோஜிதம் அதிகம் இருக்கும். வீரர்களை எல்லாம் அனுப்ப மாட்டார்கள். தூது போவது என்றால் எதிரி நாட்டு மன்னர்களிடம் மட்டும்தான் அனுப்புவார்கள். அங்கு அவமரியாதைதான் கிட்டும். அதையும் தாங்கிக் கொண்டு இரண்டு பக்கத்தையும் விட்டுக் கொடுக்காமல் அவர்களை சமாளிக்க வேண்டும். அந்த திறமை விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே உண்டு.
தேள் கொட்டாது. அதனை ஓட விட்டுப் பாருங்கள். மெதுவான பகுதியை லேசாக கொட்டும். கடினமான பகுதியை 20 நிமிடம் எடுத்துக் கொண்டு பின்னர் கொட்டும்.
குஜராத்தைப் பொறுத்த வரை முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்பு வரை இயல்பாக இருந்தது. மோடியின் பேச்சு சாதாரணமாக இருந்தது. தனது ஆட்சியைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. பின்னர் எதிர் கட்சிகள் தாக்கிய போதுதான் அதற்கு எதிராக கடினமான பேச்சை மோடி துவக்கினார். எனவே எதிரி தாக்கும்போதுதான் தனது கடினத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமயோஜிதம் உண்டு. மேடைப் பேச்சில் பேசுவதற்கு அதிக திறமை வேண்டும். எதிரியின் வாயில் இருந்து பதிலை வாங்கி அதை அவர்களுக்கே திருப்பி விடுவது விருச்சிக ராசிக்காரர்களுக்கே உண்டானது.
சாவு வியாபாரி என்று எதிர்கட்சிகள் பேசியதும், தான் சாவு வியாபாரி தான் என்று அவர் கூறினார். ராமர் பாணம் போன்று எதிரியின் அம்பையே பிடித்து கொஞ்சம் தீவிரம் செய்து அதையே ஏவி வீழ்த்தினார். இவர் விருச்சிக ராசி என்பதால் தான் இந்த திறமை. இதுபோல எதிரியின் ஆயுதத்தை உடனடியாக அவர்கள் மீது திருப்பும் திறமை மற்ற ராசிக்காரர்களுக்கு குறைவுதான்.
தூதுக்கு உரியவர் விருச்சிக ராசிக்காரர்கள் தான். தூதுக்கு செல்வதில் விருச்சிக ராசிக்காரருக்கு உரியது.
பகையாளரின் பலத்தை அறிந்தே தனது தாக்குதலை நடத்துவது, மென்மையாக இருப்பதில் மென்மையான தாக்குதலை நடத்துவது, பதுங்கியிருந்து தாக்குவது என்பதெல்லாம் தேளின் குணங்கள்.
தேளில் இரண்டு வகை உண்டு. செந்தேள், கருந்தேள். பார்ப்பதற்கு கருந்தேள் மிகப்பெரியதாகவும், பயமாகவும் இருக்கும். ஆனால் கருந்தேள் சிறியதாக காணப்படும். ஆனால், விஷத்தன்மை அதிகம்.
கருந்தேள் கடித்தால் வாயில் நுரை தள்ளி சாவார்கள் என்று கூறுகிறார்கள் அது தவறு. செந்தேளுக்கு விஷத்தன்மை அதிகம்.
அதேப்போன்றுதான் விருச்சிக ராசியில் வெள்ளையாய் இருப்பவர்கள் அதிக தந்திரம் கொண்டவர்கள். கருப்பாய் இருப்பவர்களை விட வெள்ளையாய் இருப்பவர்கள் திறமை மிக்கவர்.
மோடி தன் மீதான குற்றத்திற்கு, ஆம் நான் அப்படித்தான். நான் யாரை சாகடித்தேன். நல்லவர்களையா? நாட்டுக்கு வேண்டியவர்களையா? கெட்டவர்களைத்தானே சாகடித்தேன் என்று கூறினார்.
அவரது ஆட்சி காலம் எப்படி இருக்கும்?
எல்லாம் வலிமையாக இருக்கும். சந்திராஷ்டமத்தன்று பதவியேற்றுள்ளார். அதனால் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அண்டை மாநிலத்தினால் பிரச்சினை ஏற்படும். அண்டை மாநிலத்தவர் இவரது ஆட்சியை குலைக்க முயற்சி செய்வர்.
சந்திராஷ்டமத்தன்று பதவியேற்றதால் தனது கட்சியினாலேயே பிரச்சனை ஏற்படும். அதனால் இவர் அவரது கட்சியினரின் அதிருப்தியை சந்திக்க வேண்டி வரும். எனவே பார்த்து செயல்பட வேண்டும்.