சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி காரணங்களினால் ஏற்படும் என்று தாங்கள் கூறிய அரசியல் மாற்றங்கள் முன்னுக்குப் பின் முரண்பாடாக உள்ளது என்று எமது வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, சனிப்பெயர்ச்சியின் காரணமாக மத்திய அரசு கவிழும் என்றும் ஆனால் தேர்தல் நடந்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என்றும் கூறியிருந்தீர்கள். பிறகு குரு பெயர்ச்சியினால் ராமர் பாலம் பிரச்சினை பெரிதாகி அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி பலம் பெறும் என்று கூறியிருந்தீர்கள். இது முரண்பாடல்லவா?
ஜோதிடர் முனைவர் வித்யாதரன் :
கட்சி ஜாதகம், தலைமை ஜாதகம், நாட்டு ஜாதகம் என்ற மூன்று பார்வைகளில் அரசியலை அணுகுகின்றோம். இந்த பார்வைகள் ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே இருக்கும்.
குரு கிரகமே அணு ஆற்றலுக்கு உரியது. குரு கிரகத்தில் ஏராளமான அணு உலைகள் உள்ளன. இது தற்பொழுது செவ்வாய் வீட்டில் உள்ளது. அது நெருப்புக் கிரகம். அணுவை வெடிக்கச் செய்து நெருக்குதல் தரும். இந்த குருவானவர் 16.11.2007ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு வருகிறது. தனுசு என்பது என்ன? வில்லும் அம்பும்தான். ராமனின் ஆயுதமே காண்டீபம்தான். குரு ஓராண்டிற்கு இந்த வீட்டில் இருப்பார். இதனால் இந்த ஓராண்டில் ராமர் பாலம் பெரும் அரசியல் பிரச்சனையாகும் என்று கூறினோம்.
சேது திட்டம் துவங்கியபோது அது துலாமில் இருந்தது. அது வியாபாரத் தலம். வணிக அடிப்படையிலேயே சேது திட்டம் மதிப்பிடப்பட்டு நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த ராசியில் வியாபாரம் அபிவிருத்தி ஆகும்.
விருச்சகத்திற்கு வரும்போது அணு சக்தி பிரச்சினை ஆனது. தற்பொழுது தனுசுக்கு வருவதால் சேது (ராமர் பாலம்) பிரச்சினையாகிறது.
கேள்வி : அப்படியானால் அணு சக்தி பிரச்சினை ஒன்றுமில்லாமல் ஆகி விடுமா?
வித்யாதரன் : இல்லை. அணுசக்தி 40 விழுக்காடாக ஆகி ராமர் பாலப்பிரச்சினை 60 விழுக்காடாக ஆகி மத்திய அரசுக்கு நெருக்குதலை அளிக்கும்.
இது கட்சி ரீதியாக பா.ஜ.க.விற்கு சாதகமான சூழ்நிலை. ரத யாத்திரை அத்வானி மேற்கொண்டபோது அது தனுசு ராசியில்தான் நடந்தது. அதனால்தான் பா.ஜ.கவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. அது பலமும் பெற்றது.
இந்த ஓராண்டை (குரு தனுசுவில் உள்ள காலத்தை) சாமாத்தியமாக நகர்த்திவிட்டால், அதாவது 30.11.2008 வரை ஆட்சி நீடித்துவிட்டால் அது காங்கிரசுக்கு சாதகமாக மாறும்.
சோனியா காந்தி மிதுன ராசி. அதனால் தான் அவர் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான அடுத்த கூட்டத்தை குரு பெயர்ச்சி நாளான 16ஆம் தேதி வைத்துள்ளார்.