ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழிக்கு ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளதா?
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (16:46 IST)
ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.
ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். அதேபோல் சுக்கிரன் வசதி, வாய்ப்புகளை அளிக்கக் கூடியவர். அந்த வகையில் பார்த்தால், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி ஜோதிடத்திற்கும் பொருந்தும்.
பொதுப்படையாகப் பார்த்தாலும், ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்த குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்கு குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம்.
வரன் பார்க்கத் துவங்குவதற்கு முன்பாக மகனின் ஜாதகத்தை என்னிடம் கொண்டு வரும் பெற்றோரில் பெரும்பாலானவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், “காசு, பணம் கொண்டு வரத் தேவையில்லை. இருக்கிற சொத்தை பராமரித்துக் கொண்டு, மகனையும், எங்களையும் அன்பாக கவனித்து, பாசமாக நாலு வார்த்தை பேசும் வகையில் மணப்பெண் அமையுமா?” என்பதுதான். அதுபோன்ற எதிர்ப்பார்ப்பு உள்ள பெற்றோர், பெண்ணின் ஜாதகத்தில் 2ஆம் இடம் சிறப்பாக இருக்கிறதா? எனப் பார்த்து, மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே.
ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதை செலுத்தலாம்.
எனவே, நல்ல கிரக அமைப்பு உள்ள பெண்கள், மருமகளாக வந்த பின்னர் அந்த வீட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை நடைமுறையில் நான் பார்த்துள்ளேன். பல வி.வி.ஐ.பி. வீடுகளில் உள்ள பெண்களும் இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி.யின் ஜாதகத்தைப் பார்த்தால் ரொம்ப சுமாராக இருக்கும். அவரது கிரக அமைப்புகளால் இந்த உயரத்தை (வி.வி.ஐ.பி. அந்தஸ்து) எட்டியிருக்க முடியாது. ஆனால் அவரின் மனைவி ஜாதகம் மிகச் சிறப்பாக இருக்கும்.
மனைவியின் ஜாதகத்தில் கணவன் ஸ்தானம் நன்றாகவும், தொடர்ந்து யோக தசைகளும் நடப்பதால், கணவருக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமும், வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கும். அதனால் அவர் வி.வி.ஐ.பி.யாக கருதப்படுவார்.
இது ஒருபுறம் என்றால், புகுந்த வீட்டில் நுழைந்த உடனேயே பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பிலான ஜாதகங்களைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். அதாவது கூட்டுக் குடும்பத்தை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் அந்தப் பெண்ணால் மேற்கொள்ளப்படும். கடுமையான ஜாதக அமைப்புள்ள பெண்களை, அவர்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புள்ள வரனுடன் சேர்த்துவிட்டால் பிரச்சனைகள் ஏற்படாது.
அந்த வகையில் ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மையானதே. இன்றைக்கும் பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக சிறப்பாக இருப்பதற்கு காரணம் அந்தக் குடும்பத்திற்கு வரும் அதிர்ஷ்ட ஜாதக அமைப்புள்ள பெண்கள்தான்.
ஆண் ஜாதகத்தை (கணவர்) ஜாதகத்தை மட்டும் வைத்து முன்னுக்கு வந்த குடும்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பெண்ணின் ஜாதக அமைப்பு (மனைவி) காரணமாக முன்னுக்கு வந்த குடும்பங்கள்தான் நம் நாட்டில் அதிகம்.
எனவே, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே தங்கள் குடும்பத்திற்கு எந்த மாதிரியான பெண் தேவை என்பதை மணமகனின் பெற்றோர் முடிவு செய்து விட்டு, அதற்கு ஏற்றவாறு ஜாதக அமைப்புள்ள பெண்ணைத் தேர்வு செய்தால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.