ஜாதகப் பொருத்தம் பார்த்தும் சில திருமணங்கள் தோல்வியில் முடிவது பற்றி?
வியாழன், 20 நவம்பர் 2008 (17:54 IST)
இது ஒரு செய்தி: பெங்களூருவில் பணியாற்றும் ஒருவர் தனது மனைவியை திருமணமான 75 நாட்களில் கொலை செய்துள்ளார். காவல் துறையினர் விசாரணையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதனால் அந்தப் பெண் கர்ப்பமுற்றதும் தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பாக இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்தே அவர்கள் பெற்றோர் திருமணம் முடித்துள்ளனர். ஜாதகம் பார்க்கும் போதே அப்பெண்ணுக்கு அகால மரணம் ஏற்படும் எனத் தெரிந்திருக்காதா? அல்லது ஜாதகம் பார்த்தவர் இதனை பார்க்காமல் தவறு செய்து விட்டாரா?
ஜோதிடர் க.ப.வித்யாதரன் பதில்: புதுக்கோட்டையில் இருந்து என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒரு பெற்றோர், நாங்கள் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து விட்டோம். திருமணத்திற்கான நல்ல தேதியை மட்டும் குறித்துக் கொடுங்கள் எனக் கேட்டனர்.
மணமகன், மணமகள் ஜாதகத்தை கொடுங்கள், அதை வைத்துக் கணித்து திருமணத் தேதியை கூறுகிறேன் எனத் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதற்குத் தயக்கம் காட்டியதுடன், ஜாதகத்தை ஏற்கனவே நாங்களே பார்த்து விட்டதால், இருவரின் பெயரை மட்டும் கூறுகிறோம், திருமணத் தேதியை மட்டும் குறித்துக் கொடுத்தால் போது என கூறினர்.
ஆனால் நான் ஜாதகத்தைப் பார்க்காமல் திருமணத் தேதியை கணிக்க மாட்டேன். எனவே, தயங்காமல் ஜாதகத்தைக் காண்பியுங்கள் எனக் கூறினேன். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரின் ஜாதகத்தையும் என்னிடம் கொடுத்தனர்.
அதனைப் கணித்துப் பார்த்ததில் இரண்டு ஜாதகங்களுக்கும் பொருத்தம் இல்லை என்பது எனக்குத் தெளிவானது. அதாவது நட்சத்திரப் பிரகாரம் 10க்கு ஒன்பது பொருத்தம் உள்ளது. ஆனால் மணமகனின் நட்சத்திரத்திற்கு 4ஆம் இடம் (ஒழுக்கத்தைக் குறிக்கும்) கெட்டுப் போய் இருந்தது.
எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் 4ஆம் இடம் கெட்டிருந்து, லக்னாதிபதியும் பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் (ஆண், பெண் என்ற பேதமில்லை) ஒழுக்கக் கேடு உள்ளவர்களாக இருப்பர்.
எனது ஜோதிட அனுபவத்தில் பல ஜாதகங்களை ஆய்வு செய்ததன் மூலம் எந்த ஜாதகர் திருமணத்திற்கு முன்பு ஒழுக்கம் தவறுவார், எந்த ஜாதகர் திருமணத்திற்குப் பின் ஒழுக்கம் தவறுவார் என்பதை நன்குப் புரிந்துள்ளேன்.
சுக்ரனை களத்திர காரகன் என்று கூறுகிறோம். சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து கெட்டுப் போயிருந்தால் திருமணத்திற்குப் பின்பு அந்த ஜாதகர் ஒழுக்க நெறி தவறுவார். சுக்ரன் பலமாக இருந்து, லக்னாதிபதி கெட்டுப் போயிருந்தால் திருமணத்திற்கு முன் முறை தவறிய தொடர்புகள் இருந்திருக்கும்.
அதோடு மட்டுமல்லாமல், “மாடு, ஆடு, பெண்டிர், மனைவி, மக்கள் அவனவன் கிரக விதி” என்ற பாடலை எடுத்துக் கொண்டால், அதில் ஒருவர் ஜாதகம் (பால் ஸ்தானம்) சிறப்பாக இருந்தால்தான் அவனுக்கு வாய்க்கும் கால்நடைகள் (மாடு, ஆடு) சிறப்பான பலனைத் தரும். இதேபோல் மனைவி, மக்களும் அவர்களின் ஜாதக விதிப்படியே அமைவார்கள்.
நிறைய பெண்களுடைய ஜாதகத்தைப் பார்க்கும் போது அதில் சிலவற்றில் ஒழுக்கம் கெட்டவர் கணவராக அமைவார் என்பது தெளிவாகத் தெரியும். சில பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானத்தில் (7, 8ஆம் இடம்) பாவ கிரகங்கள் அமர்ந்து, அந்த தசை வரும் போது அப்பெண்ணின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உண்டாகும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பெண்ணின் ஜாதகத்தில் உள்ளபடி பாவ திசையை மாற்ற முடியாது. அப்பெண்ணுக்கு 30 முதல் 37 வயது வரை கேது தசை. 7, 8ஆம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கும் போது கேது தசை நடந்தால் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும், உடலுறவில் திருப்தி கிட்டாது. இதன் காரணமாக கணவருக்கு பிற பெண்கள் மேல் நாட்டம் ஏற்படும்.
எனவே, பொருத்தம் பார்க்கும் போது பெண்ணுக்கு பாவ திசை நடக்கும் காலத்தில், பையனுக்கு நல்ல தசை நடைபெறும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். மணமகனுக்கு அந்தக் காலத்தில் சுக்கிர தசை, குரு தசை, புதன் தசை அல்லது யோகாதிபதியின் தசை நடந்தால், பெண்ணுக்கு பாவ தசை நடந்தாலும் அது பாதிக்காது.
பொருத்தம் பார்க்கும் போது இதுபோன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு மணமகன், மணமகளுக்கு ஜாதகத்தை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும், ஒரு சில குடும்பங்களில் ஜாதகப் பொருத்தம் பார்த்து முடித்தாலும், திருமணத் தேதியில் பிடிவாதமாக இருப்பார்கள். வேறு சிலர் மண்டபம் கிடைக்கும் தினத்தன்று திருமணத்தை நடத்த வேண்டும் என திட்டமிடுவர். இது இரண்டுமே தவறு, அபத்தம் என்று கூட கூறலாம். வேறு சிலர் சந்திராஷ்டமத்தில் திருமணம் நடத்துகின்றனர். சந்திராஷ்டமம் ஒருவரை சாதாரணமாகவே குழப்பிவிடும். அன்றைய தினத்தில் மாங்கல்யம் ஏறினால் எப்படி நிலைக்கும்?