ஒருவர் உறுப்பு தானம் செய்வார் என்பதை ஜோதிட ரீதியாக கணிக்க முடியுமா?

திங்கள், 3 நவம்பர் 2008 (09:51 IST)
உறுப்பு மாற்று அறுவை சிகிக்சை என்பது பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளது. போரின் போது இறந்த வீரர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை மூலிகைகளின் உதவியுடன் கண் இழந்தவர்கள், கை-கால் இழந்தவர்களுக்கு பொருத்தி சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

ஒரு ஜாதகருக்கு பொதுவாக லக்னாதிபதி சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ராகு, கேது, சனி ஆகிய ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்களுடன் லக்னாதிபதி சேர்ந்திருந்தால் அவருக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நடைபெறும். தன் உறுப்பை இழந்து மாற்றொருவரின் உடலில் இருந்து பெறப்படும் உறுப்பால் அவர் உயிர் வாழ்வார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அனைவரின் உறுப்பும் அனைவருக்கும் பொருந்தாது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேறு இரத்தப் பிரிவு உள்ளது போல் உறுப்பு மாற்று சிகிச்சையிலும் வித்தியாசங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக ஒரே மாதிரியாக உள்ள இருவரது உடல் உறுப்புகள்தான், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஏற்றதாக இருக்கும்.

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான மருத்துவத் தம்பதியின் மகனான ஹிதேந்திரன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது பற்றி?

முதலில், ஹிதேந்திரன் என்ற பெயரில் உயிர்ப்பு சக்தி இல்லை. பெயரியல் முறையில் பார்த்தால் ஹிதேந்திரன் என்பதில் தொடக்கத்திலேயே ஒரு தொய்வு காணப்படுகிறது. இது சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் ஹெச் (H) என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்களை ஜோதிட ரீதியாக பயனளிக்குமா என்று பார்த்த பின்னரே சூட்ட வேண்டும். இது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் “ஹெச” என்பது புதனுடைய ஆளுமைக்கு உட்பட்ட எழுத்து. ஒருவர் ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் மட்டுமே “ஹெச” என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தவிர்த்துவிட வேண்டும்.

பொதுவாக “ஹெச” என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை புதன் சிறப்பாக இல்லாதவர்களுக்கு சூட்டினால், துவக்கத்தில் சிறப்பான வளர்ச்சியிருந்தாலும், குறுகிய காலத்திலேயே அவர்கள் கடும் சரிவை சந்திப்பர். உதாரணமாக அந்த சிறுவன் மிகப் புத்திசாலியாகத் திகழ்ந்தான். ஆனால் தற்போது நேர் மாறாக மாறிவிட்டான் என்பது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனவே “ஹெச” எழுத்தில் துவங்கும் பெயரை வைப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருவரது உறுப்பு மற்றொருவருக்கு பயன்படும் என்பதை ஜோதிட ரீதியாக அறிய முடியுமா?

நிச்சயமாகக் கூறிவிட முடியும். ஒருவரது ஜாதகத்தில் 6க்கு உரியவன் லக்னாதிபதியுடன் இணைந்தால், தன்னுடைய உறுப்பை வாழும் காலத்திலேயே தானம் செய்வார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதில் சிலர் தாங்களாகவே முன்வந்த மற்றவர்களுக்கு தானமாக வழங்குவர். சிலர் தங்களை அறியாமலேயே அவற்றை இழக்க நேரிடும் (உதாரணமாக கிட்னி திருட்டு). பொதுவாக லக்னாதிபதியும், 6க்கு உரியவரும் இணைந்திருந்தால் நிச்சயம் அறுவை சிகிச்சை உண்டு. அவர்களை உட்புறம் ஊனமுற்றவர்கள் என்றும் கூறலாம்.

அந்தந்த தசா புக்தியைப் பொறுத்து அவர்கள் விருப்பத்தின் பேரிலோ அல்லது விருப்பம் இல்லாமலோ உறுப்பு தானம் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்