செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் காம உணர்வுகள் பற்றி?

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (00:44 IST)
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான காம உணர்ச்சி இருக்கும் என்பது திண்ணம். தாம்பத்தியத்தில் தொடர்ந்து நாட்டம் இருக்கும். ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர்.

தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் மறுப்பார். இது தொடர்கதையாகும் போது பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையே.

ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று மனைவி விளையாட்டாக கூறினாலும், அதை கணவன் தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.

செவ்வாய் தோஷம் இருக்கும் ஒருவருக்கு தோஷம் இல்லாத ஜாதகரை திருமணம் செய்து வைத்தால் அது பெற்றோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறுவதில் உண்மை உண்டா?

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.

செவ்வாய் தோஷ ஜாதகருக்கு திருமணம் தள்ளிப்போவதாக கூறப்படுவது குறித்து?

அப்படிக் கூற முடியாது. கடந்த 1979க்கு பின்னர் பிறப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். ஏனென்றால் அந்த காலகட்டத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் இடம் அப்படி மாறியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு வரன் கிடைப்பதில் சிக்கல் இருந்திருக்கலாம். அதற்குக் காரணம் அப்போது செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் குறைவு என்பதே.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் செவ்வாய் தோஷம் உள்ள வரன்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறுவதை நிச்சயம் ஏற்க முடியாது. தற்போது செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகருக்கு, வரன் கிடைப்பதில் வேண்டுமானால் தாமதம் ஏற்படலாம். தோஷம் இல்லாத ஜாதகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

செவ்வாய் தோஷம் உள்ள அமைப்பு: ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் உண்டு. இந்த அமைப்பு தற்போது பரவலாக உள்ளது. எனவே திருமணம் தடைபடுகிறது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்