பிக்-பேங் ஆராய்ச்சி குறித்து ஜோதிடத்தின் கருத்தென்ன?

ஜெனீவாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக முதற்கட்ட பிக்-பேங் சோதனையை நடத்தினர். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் இரண்டாம் கட்டமாக முக்கிய சோதனையை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ஜோதிட ரீதியாக உங்கள் கருத்து என்ன?


ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:


சிம்மச்சனி நடந்து வருவதால், தற்போது நடத்தப்படும் விஷயங்கள், ஆய்வு என்ற பெயரில் உலகத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கஇது. ஆய்வு நோக்கில் அணுக்களை (குறிப்பாக புரோட்டன்களை) ஒன்றுடன் ஒன்று மோதச் செய்வது அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறுவதால் அதனை பழமைவாதம் எனக் கூறக் கூடாது.

சிம்மத்தில் சனி இருக்கும் போது உலகம் தோன்றிய விதம் அல்லது வேறு பல கேள்விகளுக்கான விடைகளை விஞ்ஞானிகளால் பெரியளவில் கண்டறிய முடியாது. பூமியின் இயல்பு நிலையை (இயற்கை கட்டமைப்பு மற்றும் கோள்களின் இயல்பு நிலை) இதுபோன்ற ஆய்வுகள் சின்னாபின்னமாக்குகின்றன.

சூரியன் வீட்டில் சனி, ராகு, கேது இடம்பெறும் போது இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் ஒட்டுமொத்த கிரகங்களும் சூரியனின் ஈர்ப்புத்தன்மையை பொறுத்து அனைத்து கிரகங்களும் தமது பாதையில் சீராக இயங்கி வருகின்றன. சூரியன் வீடு என்பது சிம்மம். தற்போது அதில் சனி உள்ளதால், இதுபோன்ற ஆய்வுகளால் உலக மக்களுக்கு ஆபத்துதான் ஏற்படும். பருவநிலை மாறும்.

பொதுவாகவே சிம்மத்தில் சனி அமர்ந்தால் மழை பொய்க்கும். அதேபோல் “மகத்தில் சனி வந்தார் போல் மயங்கினால் ஈழவேந்தன” என்பது போன்ற பாடல்கள் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன. மகம் என்பது சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரம்.

மகத்தில் சனி வந்தாலே மனிதர்கள் மனம் மாறும். உலக மக்கள் குறுகிய நோக்கை பின்பற்றுவர். தொலைநோக்கு ஆய்வு என்ற பெயரில் வியாபாரத்தை திணிப்பார்கள். இந்த ஆய்வும் அதுபோல் வியாபார நோக்கத்திற்காக செய்யப்படும் ஒன்றே தவிர உலக மக்களின் நன்மைக்காகவோ அவர்களைக் காப்பதற்காகவே நடத்தப்படுவது அல்ல. இது ஒரு வியாபார யுக்தி.

அதாவது ஏவுகணை சோதனை நடத்தி, அது இவ்வளவு தூரம் உள்ள இலக்குகளை தாக்கும் என்று ஒரு நாடு அறிவித்தால், அந்த ஏவுகணையை வாங்க ஆர்டர்கள் குவிவது போல், இந்த சோதனையை நடத்தி அதன் மூலம் வியாபார யுக்தியை பின்பற்றும் சூழ்ச்சியே இதன் முக்கிய திட்டமாகும்.

இதுமாதிரியான ஆய்வுகள் சனி துலாத்தில் வரும் போது வெற்றியடையும். அதாவது 2015இல். ஒரு சிலர் கேள்வி எழுப்பலாம். அதாவது இப்போதிருந்து செய்தால் தானே எதிர்காலத்தில் சிறப்பான வெற்றியை பெற முடியும்; அறிவியல் என்பது படிப்படியாக போகக் கூடியதுதானே என்று கேட்கலாம்.

சிம்மத்தில் சனி இருக்கும் போது மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. சாதாரணமாகவே சிம்மத்தில் சனி வந்ததால் உலகெங்கும் பேரழிவு ஏற்பட்டு வரும் தருணத்தில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்த ஆய்வை நடத்தி அழிவின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறார்கள். எனவே இந்த ஆய்வை ஒரு சில காலத்திற்கு பிறகு நடத்தலாம்.

சிம்மச்சனி சூட்சுமங்களை நிச்சயமாக வெளிக்கொணர உதவாது. ஏனென்றால் சனி என்பது மாயாஜாலக் கிரகம். மேலும் இந்த ஆய்வின் முடிவில் உண்மையான, நிச்சயமான காரணங்களை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாது. அனுமானத்தின் அடிப்படையில் வேண்டுமானால் ஏதாவது ஒன்றை கண்டறியலாம். ஆனால் காலப்போக்கில் மேற்கொள்ளப்படும் நவீன ஆய்வுகளில் அது தவறு என்று தெரியவரும். எனவேதான் இந்த ஆய்வு இந்த தருணத்தில் மேற்கொள்ள வேண்டாத ஒன்று எனக் கூறுகிறேன்.

அக்டோபரில் நடத்தப்படும் 2ம் கட்ட ஆய்விலும் பெரிதாக எந்த விஷயத்தையும் விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாது. வியாபார ரீதியில் வேண்டுமானால் பெரிதாக வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவாக இருக்காது என்பதே என் கருத்து.

மனிதர்களுக்குள் ஏற்படக் கூடிய தூண்டல் அனைத்திற்கு‌ம் கிரகங்களே காரணம் என முன்பு பேசிய போது குறிப்பிட்டீர்கள். மனிதர்கள் என்று பார்க்கும் போது விஞ்ஞானிகளும் அந்த வரையறைக்கு வந்து விடுகின்றனர். இப்போது பிக்-பேங் ஆய்வை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகளைத் தூண்டுவதும் கிரகங்கள் தானே?

பதில் : நிச்சயமாக. அதாவது சிம்மச்சனி இந்த மாதிரியான சில சிந்தனைகளை ஆய்வாளர்களுக்கு, அறிஞர்களுக்கும், அறிவியல் வல்லுனர்களுக்கும் ஏற்படுத்தும். படைப்பின் ரகசியங்கள், சூட்சுமங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ளத் தூண்டும். ஆனால் இந்த முயற்சி தோல்வியை அளிக்கும் அல்லது தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்.

பொதுவாக சூரியனும், சந்திரனும் மிக முக்கியமான கிரகங்கள். சூரியன் தான் ஆத்மா என்று கூறப்படுகிறது. அடுக்கடுக்காக அறிவியல் ஆய்வுகளை தூண்டக் கூடிய கிரகமும் சூரியன் தான். அந்த சூரியன் வீட்டில் தற்போது சனி அமர்ந்துள்ளது.

சந்திரன் தான் மனதளவில் திட்டங்களை தீட்டத் தூண்டும் கிரகம். தற்போது சந்திரன் வீட்டில் கேது அமர்ந்துள்ளார். இந்த 2 வீடுகளிலும் பாவ கிரகங்கள் இருப்பதால் மனிதர்களுக்கு மாறுபட்ட சிந்தனைகள் உருவாகிறது.

பகுத்தறிவு சிந்தனைகளை தூண்டுவது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களே. ஆனால் பகுத்தறிவு என்ற கூறிக் கொண்டு பாதகமான பாதைக்கோ, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆய்வுகளையோ மேற்கொள்ளக் கூடாது.

அதிகபட்ச பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வின் போது உற்பத்தியாகும் கதிர்வீச்சு ஆய்வுப் பகுதியை விட்டு வெளியேற முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்து?

பதில் : இந்த ஆய்வு மிகப் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டாலும், இதன் காரணமாக நிச்சயம் பூமிக்கு பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆய்வின் போது உருவாகும் கதிர்வீச்சு பல அடி ஆழம் வரையுள்ள மண்ணின் உயிர்தன்மையை அகற்றிவிடும்.

மேலும் சுரங்கத்தில் தான் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது; அந்த சுரங்கத்தை விட்டு கதிர்வீச்சு வெளியே செல்லாத வண்ணம் கதிர்வீச்சுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஒரு டம்ளரில் சுடு தண்ணீரை வைத்தால், அதன் வெப்பம் வெளிப்புறமும் உணரப்படுகிறது அல்லவா. அது போல் தான் இந்தக் கதிர்வீச்சின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்