ஜாதி என்பதற்கு ஜோதிட அடிப்படை இருக்கிறதா?

ஒருவர் இந்த ஜாதி என்று முகத்தை வைத்தோ, ரத்தத்தை வைத்தோ கூற முடியாது. அப்படியே அவரது பழக்கவழக்கங்களை வைத்துக் கூறினாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூற முடியும். அவரது சாதி அல்லது மதத்தை குறிப்பிட முடியாது. சாதி என்பதற்கு ஜோதிட ரீதியாக அடிப்படை இருக்கிறதா? இல்லையா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஜோதிட நூல்களின் அடிப்படையில் அனைத்து ஜாதிகளும் பிரித்தே வைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக புதன் என்றால் வைசியன், குரு என்றால் பிராமணன், சூரியன் என்றால் சத்ரியன் என விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் வைசியன் என்றால் அவரது குணங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜாதகத்தை பார்க்கும் போது, அக்ரஹாரத்தில் பிறந்த குப்பத்துப் பையனின் ஜாதகமாக இருக்கிறதே என்று குறிப்பிடுவேன். ஏனென்றால் அவரது நடவடிக்கைகள், குணங்கள் அதுபோல் அமைந்திருக்கும்.

மற்றொரு ஜாதகத்தைப் பார்க்கும் போது, சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கிறதே எனக் கூறியுள்ளேன். அதாவது பெற்றோர் பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், உணவு முறை ஆகியவற்றல் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், அவர்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருந்ததால், அக்குழந்தையை நல்ல முறையில் வளர்க்கப் பாருங்கள் என்பேன்.

கிரகத்தைப் பொறுத்தே குணம்!

எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயங்கள் அமையும். கஞ்சமான குடும்பத்தில் வாரிக் கொடுக்கும் தன்மை உடையை குழந்தை பிறந்திருக்கும். உதாரணத்திற்கு, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நாளைக்கு தேவை என்று எதையும் தங்களுக்காக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

குணநலன்களை வைத்து கிரகங்களுக்கு ஜாதி கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, செய்யும் தொழில் அல்லது அவரின் நிறம் உள்ளிட்டவற்றை வைத்து அவற்றிக்கு ஜாதி அந்தஸ்து கொடுக்கப்படவில்லை.

பெண் கொடுக்கல் வாங்கலில் ஜாதியால் ஏற்படும் சிக்கல் குறித்து...

என்னிடம் இதே பிரச்சனைக்காக வந்த ஒரு குடும்பத்தினரின் நிகழ்வை எடுத்துரைக்கிறேன். அந்தக் குடும்பத்துப் பையன் வேற்று ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலிக்கிறார். திருமணமும் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் அவரின் தந்தையும், சகோதரியும் அவரது ஜாதகத்துடன் என்னிடம் வந்து விளக்கம் கேட்டனர்.

நாங்கள் செளராஷ்ட்ரா குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் என் சகோதரர் யாதவ குலத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கிறார். ஜாதகத்தில் அவரது சகோதரருக்கு யாதவனுக்கு உரிய கிரக அமைப்பு சிறப்பாக உள்ளது. யாதவனுக்கு உரிய நட்சத்திரத்திலும் அவர் பிறந்துள்ளார் என்பது தெரிந்தது.

ஜாதகப்படி பையன் சரியான பெண்ணையே தேர்வு செய்துள்ளார், எனவே இந்த காதல் விஷயத்தில் தலையிடாதீர்கள் எனக் கூறி விட்டேன். இதைக் கேட்டவுடன் அவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கையை விட்டு எழுந்து விட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்தி மீண்டும் பேசிய நான், இந்த ஜாதகருக்கு புதன், சந்திரனின் ஆதிக்கம் சிறப்பாக இருக்கிறது. புதனுடைய நட்சத்திரமான கேட்டையில் பையன் பிறந்துள்ளார். கேட்டை என்றாலே காதல் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அதனால் புதன், சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த இவர், பால்காரர் வீட்டில் பெண் எடுக்கப் போகிறார் என்று நகைச்சுவையாக கூறி சூழலை சகஜப்படுத்தினேன். அதாவது இனத்துடன் இனம் சேரும் என்று கூறுவது யாதவருடன், யாதவர் இணைவர் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. மாறாக புதனின் ஆதிக்கத்தில் உள்ள ஒருவர், புதனின் ஆதிக்கத்தில் உள்ள பெண்ணுடன் சேருவார் என்றே கொள்ள வேண்டும்.

அதனால் ஜாதியை வைத்துப் பிரிக்காதீர்கள். கிரகங்களை வைத்துப் பாருங்கள். அதாவது கிரக ஜாதி என்பது வேறு; மனித ஜாதி என்பது வேறு என்று விளக்கிக் கூறி அவர்களை அனுப்பி வைத்தேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்