27 நட்சத்திரத்திலும் பார்த்தால் ரேவதி நட்சத்திரக்காரர்கள் மட்டுமே வாழ்நாள் முழுவதும் விளையாட்டில் ஈடுபடுவார்கள். 70 வயது ரேவதி நட்சத்திரக்காரர் 20 வயது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்.
எனவே ரேவதி நட்சத்திரக்காரர்கள் விளையாட்டுத் துறையில் அதிகம் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
இதில்லாமல் வேறு பல நட்சத்திரங்களும் விளையாட்டுத் துறையில் புகழ் அடைகிறார்கள். சச்சின் அஸ்தம் நட்சத்திரம். நட்சத்திரத்தை வைத்துப் பார்க்காமல் பொதுவாக விளையாட்டுத் துறைக்கானவன் என்று பார்த்தால் அது புதன்தான்.
கல்விக்கும், விளையாட்டுக்கும் உரியவன் புதன்தான். இரண்டுக்குமே தேவையான ஒரு சின்ன உந்துதலைத் தருபவன் புதன்தான்.
ஒரு சில நொடிகளில் கணித்து அதற்கு ஏற்றவாறு தனது செயலை மாற்றக் கூடிய திறனைக் கொடுப்பவன் புதன்தான்.
விளையாட்டுத் துறையில் சிறப்படைய வேண்டும் என்றால் புதன் அடிபடாமல் இருக்க வேண்டும். கேதுவோடு, செவ்வாயோடு சேராமல், கேது, செவ்வாயோடு உட்காராமல் இருக்க வேண்டும்.
புதன் நீசமடையும்போது தான் வீரர்கள் பின் தங்குதல், மைதானத்திலேயே அடித்துக் கொள்வது போன்றவைகள் நடக்கின்றன. ஊக்கமருந்து எடுத்துக் கொள்வது போன்றவையும் அப்போதுதான்.
புதன் நீச்சமடைவது, பகை கிரகத்துடன் சேரும்போது, பகை வீட்டில் உட்காருவது போன்ற நேரத்திலும் இவ்வாறு நடக்கும்.
கல்வியிலும் எவ்வளவு நன்றாகப் படித்தாலும் அந்த இரண்டரை மணி நேரத்தில் எழுதுவது தான் முக்கியம். அந்த நேரத்தில் மாணவன் கோட்டை விட்டுவிடுவான்.
அதுபோலத்தான் ஆட்டத்திலும் பயிற்சியில் நன்றாக ஆடிவிட்டு மைதானத்தில் கோட்டைவிடுவதும்.