எல்லாருமே ஒரு காலக்கட்டத்தில் ஏமாறுவார்கள். எல்லாருமே ஒரு காலக்கட்டத்தில் பிறரை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். இதில் கிரக சஞ்சாரங்கள், ஜோதிட விதிப்படி பார்த்தால் தனது வாழ்நாள் முழுவதும் உத்தமராக வாழ்ந்தவர் என்று ஒருவரையும் சொல்ல முடியாது.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிறப்பாக வாழ்ந்து பெயர் பெற்றவர்கள்தான் உண்டு.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வரும்போது ஏமாற்றப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.
“பெரிய வழக்கறிஞர் நான், என் மீதே வழக்குப் போட்டுவிட்டார்கள், பெரிய காவல்துறை அதிகாரி நான் என் மகளையே கடத்திவிட்டார்கள்” என்று கதறுவதை எல்லாம் பார்த்திருக்கிறோம்.
வசதி, வாய்ப்புகள், கல்வி என்று என்ன இருந்தாலும் எல்லா மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். அதனுடைய சதவீதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
ஒரு சிலரைப் பார்த்தால் இவர் 70 சதவீதம் மற்றவரை ஏமாற்றியே சாப்பிடுகிறார் என்று சொல்வார்கள். இவர் வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுவார் என்று சொல்லலாம். யாரையும் ஏமாற்றவில்லை, யாரையும் மோசம் செய்ய வில்லை என்று சொல்லவே முடியாது.
கிரக அமைப்பை பொறுத்து எல்லா மனிதர்களுக்கும் மோசமான தசா புக்தி வரும். ஒவ்வொரு தசையிலும் ஒவ்வொரு புக்தியாவது மோசமான புக்தியாக இருக்கும்.
சாதாரணமாக சூரியன் தசை என்று எடுத்துக் கொண்டால், அது எவ்வளவு நல்ல யோக தசையாக இருந்தாலும், அதில் சனி புக்தி நல்லதாக இருக்காது.
சூரியன் தசையில் கேது புக்தி நல்லது செய்யாது. மற்ற ஏழு புக்திகளும் நல்லது செய்தாலும் சனி புக்தியில் விபத்தோ, ஏமாற்றப்படுதலோ ஏற்படும். ஒரு சூழ்ச்சி செய்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வது நடக்கும்.
இதுபோன்ற காலக்கட்டங்களில் கடன் கொடுக்காதீர்கள், கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம்.
எனவே தசா புக்திகளின் அடிப்படையில்தான் இவையாவும் நடக்கின்றன. எனவே இந்த ராசிக்காரர்கள்தான் ஏமாற்றுவார்கள், இந்த ராசிக்காரர்கள்தான் ஏமாறுவார்கள் என்றில்லை.
அமாவாசையில் பிறந்தால் திருடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பவுர்ணமியில் பிறந்து முழு நேர திருடரானவர்கள் எல்லாம் உண்டு.