இதை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது. மன எழுச்சிகளில் முக்கியமானது தன்னம்பிக்கை என்பது. தன்னம்பிக்கை அதிகமாகும்போது அது அகங்காரம் ஆகிறது. மற்றவர்களை மதிக்காமல் போவது போன்று இருப்பது அகங்காரம் என்கிறோம்.
பொதுவாக லக்னத்தில் ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் இதுபோன்று இருப்பார்கள்.
கேதுவை ஞானக் காரகன் என்கிறோம். அது லக்னத்தில் இருந்தால் நல்லதுதான். ஆனால் இவர்கள் தாமதமாக அகங்காரத்தை வெளிப்படுத்துவார்கள்.
ராகு லக்னத்தில் இருந்தால் அதிகமாக அகங்காரத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் பேசும்போதே தெரியும். ஆறாம் இடம்தான் வம்புக்கிழுத்தல், சிக்கல்களை உருவாக்குதல் போன்றவை.
அதுபோல் ஆறுக்குரிய கிரகம், இரண்டாம் வீட்டில் அதாவது பேச்சுக்குரிய ஸ்தானத்திற்கு வந்தால் அவர்கள் பேசுவதே ஆணவமான பேச்சு, அகங்காரமான பேச்சாக இருக்கும். பேச்சால் சிக்கல் ஏற்படுத்துதல், குழப்பம், கொள்ளை, கொலை போன்றவற்றை உருவாக்கும்.
சிலர் பேசுவதெல்லாம் பெரிய பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதே, அது ஆறுக்குரியவன் 2ஆம் வீட்டில் இருந்தால்தான் நடக்கும்.
அதே போல், 2ஆம் இடத்தில் சூரியன்- செவ்வாய், சனி-செவ்வாய், சனி - ராகு போன்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால் அவர்களுக்கும் அகங்கார பேச்சு இருக்கும். நேரடியாக பேசும்போது ஒருவருடன் பேசும்போது தன்மையாக பேசுவது போல் இருக்கும். இருவருடன் மற்றொருவர் சேர்ந்துவிட்டால் அவர்களது பேச்சு தொனி மாறும்.
லக்னாதிபதி நல்ல விதத்தில் இருந்தால் அதாவது மேஷ லக்னம், விருச்சிக லக்னம் போன்று ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு இருக்கும். எனவே லக்னாதிபதி நன்றாக இருந்துவிட்டால் அமைதியாக, நல்லவர்களாக இருப்பார்கள்.
லக்னாதிபதி கெடும்போதோ அல்லது ஆறுக்குரியவன் வலுவடையும் போதோ இதுபோன்று ஏற்படும்.
2ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து, அந்த கிரகத்தை 6 அல்லது 8க்குரிய கிரகங்கள் பார்க்கும்போது அவர்கள் இதுபோன்று அகங்காரத்திற்கு ஆளாவார்கள். அவர்களுக்கு தலைகணம் அதிகமாக இருக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுதல், மற்றவர்களை கெடுக்கும் விதத்தில் செயல்படுதல் போன்றவை இருக்கும்.
சிறைக் கைதிகளை சந்தித்தது உண்டு. அவர்களது ஜாதகம் போன்றவற்றை வாங்கி பார்க்கும்போது இதுபோன்ற கிரக அமைப்பு உள்ளவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். 6க்குரியவனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். 6க்குரிய தசை வந்தால் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களது பேச்சு மாறும். தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், மற்றவர்களை மட்டம் தட்டுதல் போன்று பேசுவார்கள்.
மன எழுச்சியால் அழிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அதற்கும் இந்த கிரகங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. சுப கிரகங்கள் நல்ல விதத்தில் அமைந்துவிட்டால் நல்ல பலன்களைத் தரும். புதன் நல்ல விதத்தில் அமைந்துவிட்டால் மன எழுச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றலை நமக்கு உண்டாக்கும்.
தியானம் போன்றவற்றின் மூலம் நமது சிந்தனையை திசை திருப்புதல், கோபம் வரும்போது அங்கிருந்து இடம்பெயர்தல் போன்றவற்றை புதன் ஆதிக்கம் கொண்டவர்கள் செய்வார்கள். தங்களைத் தாங்களே செதுக்கிக் கொள்வார்கள்.
அகங்காரம் பிடித்தவன் என்று சொல்லக் கேட்டும், நட்பு வட்டாரத்தில் இப்படி இருக்கிறாயே மாறக் கூடாதா என்று கேட்டும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாதவன் ஜாதகத்தில் புதன் கெட்டுப் போய் இருக்கும்.
சிலர் சில காலம் வரை இப்படி இருப்பார்கள். புதன் நன்றாக அமைந்துவிட்டால் அவர்கள் சரி ஆகிவிடுவார்கள்.
புதன் சொல் புத்தி. லக்னாதிபதி சொந்த புத்தி. புதன் நல்லா இருந்தால் மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். அகங்காரத்தை விட்டு விடுவார்கள்.
இதை வைத்துத்தான் சிலரை அதிகம் பேச வேண்டாம் என்று கூறுகிறீர்களோ?
பொதுவாக கோச்சார கிரகங்களைப் பார்த்தால், எல்லா மனிதர்களும் குறிப்பிட்ட நேரத்திலோ குறிப்பிட்ட நாட்களிலோ அகங்காரத்துடன் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் கோச்சார கிரகங்கள்தான்.
இப்படி நல்லவராக இருப்பவர் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டாரே என்று சொல்வதெல்லாம் கோச்சார கிரகங்களின் பலனால்தான்.
சந்திராஷ்டம தினத்தில் எல்லாம் ஆணவப் பேச்சு, அகங்காரப் பேச்சு வரும். 6க்குரியவன் வருடத்திற்கு ஒரு முறையாவது 2ம் இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் வந்தமர்வான். அப்போது வாரப்பலன், தினப்பலன் எல்லாம் எழுதும்போது, 6க்குரியவன் 2ம் இடத்தில் இருக்கிறான். எனவே கவனமாக பேசுங்கள். பேச்சைக் குறையுங்கள். எதிலும் கவனம் தேவை என்று எழுதுகிறோம்.
ஜாமின் கையெழுத்து போடாதீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசுவார்கள். அதனை கவனத்தில் கொள்ளாதீர்கள் என்றும் நாம் சொல்வதும் அதன் அடிப்படையில்தான்.