இந்த ஆண்டு கோடைக்காலம் எப்படி? தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
செவ்வாய், 18 மார்ச் 2008 (15:15 IST)
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
காலாண்டரில் மழை பெய்யும் என்பதை எவ்வாறு கணிக்கிறார்கள்?
சந்திர கற்கடக யோகம் என்று ஒன்று உள்ளது. சந்திரன் குளிர்ச்சி தன்மை உடையது. சந்திரன் தனது சொந்த வீட்டில் அல்லது சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் போது, அதாவது சந்திரனின் முதல் சொந்த நட்சத்திரம் ரோகிணி. ரோகிணி நட்சத்திர நாட்களில் வெம்மை பொதுவாகவே குறைவாக இருக்கும். அதுபோல பூசம், ஆயில்யம் போன்ற நட்சத்திர நாட்களிலும் சந்திரன் ஆட்சி பெற்றிருப்பார். அன்றைய நாட்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும்.
அதே போல குருவின் பார்வையைப் பெற்று சந்திரன் உட்காரும்போதும் மழை பெய்யும். சூரியனுக்கு முன்னும் பின்னும், சூரியனின் ஆறு பாதைக்குள் மழைக்கோளான சுக்கிரன் உட்கார்ந்திருந்தாலும் மழை உண்டு.
இந்த கோள் அமைப்பை வேறு எந்த பாவ கிரகங்களும் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் மழை உண்டு.
சுக்கிரன் மழைக் கோள். சந்திரன் குளிர்ச்சிக்குரிய கிரகம், சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் பெயர்ச்சி அடையும். எனவே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் மழை பெய்யும். எந்த வீட்டில் இருந்து எந்த வீட்டிற்கு மாறுகிறது என்பதை வைத்து அந்தந்த பகுதிகளைக் கணக்கிடலாம்.
கோடை மழை எப்படி இருக்கும்?
கோடை மழை அதிகமாக இருக்காது. ஆனால் அதிக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது மழை இருக்கும்.