தில்லை நடராஜர் கோயில் பிரச்சினை எதனால்?

திங்கள், 10 மார்ச் 2008 (14:49 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஆதிகாலத்தில் இருந்தே சிதம்பரம் கோயில் மிகுந்த சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. அங்கு சிலை வடிவமாக இல்லாமல் இறைவன் ஆகாச வடிவமாக இருக்கிறான்.

அந்த கோயில் சக்தி வாய்ந்தது. அங்கு சித்தர் பீடங்கள் உள்ளன. ராஜ ராஜ சோழன் தில்லை நடராஜரை தரிசித்து பல வருடங்களாக சிவ வேடம் பூண்டு தேவாரம், திருவாசகம் பாடி மகிழ்ந்திருந்த காலங்களும் உண்டு.

அதுபோல சிதம்பரம் கோயிலில்தான் ஜோதிடத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடிய நாடி ஜோதிட சுவடிகள், மருத்துவச் சுவடிகள் அனைத்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தனை சக்தி வாய்ந்த கோயிலில் தற்போது பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்குக் காரணம் கோயில் என்பது ஒரு வழிபாட்டுத்தலம். அதிலும் சிவனின் திருத்தலம். அந்த வழிபாட்டுத் தலத்தை அதிக அலங்காரம் செய்வது தவறு.

சிவன் எளிமையை விரும்புபவர். அபிஷேகப் பிரியர். அவர் அலங்காரப் பிரியர் அல்ல. அதனால்தான் வைணவத் தலங்களை எடுத்துக் கொண்டால் பெருமாள் சலக ரத்னங்களையும் அணிந்து கொண்டு காட்சியளிப்பார்.

ஆனால் சிவாலயங்களில் சிவன் எளிமையாகத்தான் இருப்பார். விசேட நாட்களில்தான் அலங்காரம் செய்து கொள்வார். அப்படிப்பட்ட சிவன் கோயிலில் பொன் (தங்கக்) கூரை வேய்ந்தது தவறு.

வழிபாட்டுத் தலத்துக்கானவன் கேது. ஞானத்தைத் தரக்கூடியவன். எளிமையாக நின்று இறைவனை நாம் வணங்க வேண்டும். அப்படியானல் வழிபாட்டுத் தலத்தை (குறிப்பாக சிவாலயம்) பொன் கூரை வேய்வது சில எதிர்மறையான விளைவுகளைத் தரும்.

பெருமாள் ஆலயம், அம்மன் ஆலயம் போன்ற கோயில்களை பொன்னால் அலங்கரித்தல் எந்த கெட்ட பலனையும் தராது. ஏனெனில் பொன் என்பது குரு பகவானின் உலோகம். தலம் என்பது கேதுவின் வகையில் வரும். குரு ஆன்மீகத்துக்குரியவன்தான். ஆனால் பொன் கூரை வேயும்போது குருவின் உலோகத்தை பயன்படுத்தும்போது கேதுவின் தாக்கம் மாறுபடும்.

அங்கு மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் போன்றவை குருவின் உலோகமான தங்கம் வேயும் போது உருவாகும். சிவாலயங்களில் தங்கக் கூரை வோயாமல் இருப்பது நல்லது. அப்படி வேயும்போதுதான் தாங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் ஒரு சிலருக்கு வர வாய்ப்புள்ளது.

கேது ஞானக் காரகன். எளிமையானவன், வழிபாட்டுத் தலங்களுக்குரியவன். யார் வந்தாலும் இறைவனை வழிபடலாம் என்பதுதான் கேதுவின் சித்தாந்தம். அந்த கோயிலில் குரு நுழையும் போது - அதாவது தங்கம் நுழையும் போது இது அனைவருக்கும் பொதுவானதல்ல. ஒரு சாராருக்கு மட்டும் சேர்ந்தது என்ற எண்ணத்தை உருவாக்கும்.

அதனால்தான் ஒரு சாரார் எங்களுடையது, நாங்கள் சொல்வதுதான் மந்திரம், மற்றவர்கள் சொல்வதெல்லாம் மந்திரங்கள் அல்ல என்று கூறுகின்றனர்.

இங்கு இறைவன் அண்டத்தில் இருக்கிறான். இறைவன் அண்ட கிரகங்களுக்கும் பரந்து இருப்பதாக ஐதீகம். அக்னி சொரூபம். மேல் நோக்கி இருக்கும் இறைவனை ஓரிடத்தில் பிடித்து வைத்து தங்கக் கூரை வேய்ந்ததன் மூலம் தங்கக் கூண்டில் அடைத்து வைத்தது போல் ஆகிவிட்டது.

சிவாலயங்களில் விமானத்தை தங்கத்தால் வேயக் கூடாது. தங்க தகடுகளை சுவர்களில் பதிக்கலாம்.

தில்லை நடராஜர் என்றால் ஆகாயத்தில் இருப்பதாகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய சொரூபனாக காட்சி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தங்கக் கூரை வேய்ந்ததால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது குரு தனது வீட்டில் ஆட்சி அடைந்துள்ளார். குரு ஆட்சி அடையும் போதெல்லாம் அங்கு பிரச்சினை ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்