இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கூறியுள்ளார்!
1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்த நரேந்திர மோடி அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசிக்காரராவார். குரு லக்னத்தில் (தனுசு) பிறந்துள்ளார். குரு அந்தண கிரகம், ஆன்மீக கிரகம். இந்த ராசிக்காரர்கள் மத நம்பிக்கையாளர்கள். கலைத் துறைச் சார்ந்தவர்கள், இளைஞர்கள் ஆதரவு கணிசமாகப் பெறுவார்கள்.
இவர் ஜாதகத்தில் சனி பகை வீட்டில் (சிம்மம்) அமர்ந்துள்ளார். எனவே, தினக்கூலி பெறுவோர், பாட்டாளிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்காது.
அனுஷம் பயங்கரமான நட்சத்திரம். சூழ்ச்சி, அறிவு, ராஜதந்திரம், சக்தி, மங்கள யோகம், ஜெகசேகரி யோகம் கொண்டது. இவர்கள் யதார்த்த அறிவு அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அடுத்த வாரம் நிகழவுள்ள குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இருக்கும். கட்சிக்குள் உள்ள எதிர்ப்பாளர்கள் கூட கடைசி நேரத்தில் இவருக்கு ஆதரவு தருவார்கள்.
அதே நேரத்தில் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் டிசம்பர் 11 மற்றும் 16 §திகளில் நடக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நரேந்திர மோடிக்கு கடுமையான எதிர்ப்பைத் தருவார்.
டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் முதற்கட்டத் தேர்தல் நரேந்திர மோடிக்கு சாதகமாக அமையும். அடுத்த 3 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள 2வது கட்டத் தேர்தலில் மோடிக்கு கடுமையான போட்டி இருக்கும். சோனியா காந்திக்கு சந்திராஷ்டம் இருப்பதால் அவருக்கு சாதகமாக அமையும்.
வாக்காளர்களில் மேல் தட்டு வாக்காளர்கள் முழுமையாக மோடிக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். அதிக வாக்காளர்களைக் கொண்ட நடுத்தர வாக்காளர்களில் காங்கிரசும், பாஜகவும் சம அளவில் ஆதரவைப் பெறுவார்கள். சாதாரண அடித்தட்டு வாக்காளர்கள், குறிப்பாக குஜராத்தில் உள்ள பழங்குடியினர், சிறுபான்மையினர் வாக்காளர்கள் காங்கிரசிற்கு வாக்களிப்பார்கள்.
ஆயினும், தேர்தல் முடிவு மோடிக்கு வெற்றியாகவே அமையும். சாதாரண பெரும்பான்மையுடன் மீண்டும் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராவார்.