இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகள் எதிர்த்து வருவதால் மத்திய அரசு கவிழும் என்று ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் கூறுகிறார்!
அணு சக்தி ஒப்பந்தம் காரணமாக ஆளும் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு நிச்சயம் ஆட்சி கவிழ்வதில்தான் முடியும் என்றும், ஆனால் மீண்டும் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் கூறுகிறார்.
அணு என்பது புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ஆகிய 3 கூறுகளைக் கொண்டது. இதில் நியூட்ரான் = புதன், எலக்ட்ரான் = சனி, புரோட்டான் = குரு, அணு சக்தி = செவ்வாய். இப்படித்தான் ஜோதிடம் பார்க்கிறது.
அணு சக்திக்கு உரிய கிரகம் செவ்வாய். அது தனது எதிர் கிரகமான சனியின் பார்வைக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆட்பட்டுள்ளது. அதுமுதலே இந்தப் பிரச்சனை தீவிரமடைகிறது (ஆகஸ்ட் 5 ஆம் தேதிதான் இரு நாடுகளும் அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தக்கூடிய 123 ஒப்பந்த விவரங்களை வெளியிட்டன. அன்று முதலே எதிர்ப்பு துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது).
செவ்வாயின் மீதான சனியின் பார்வை செப்டம்பர் 16 வரை தொடரும். ஆனால், 17.09.2007 முதல் புதன் வீட்டில் செவ்வாய் வந்து அமர்வது மட்டுமின்றி, 23.11.2007 முதல் அது வக்கிர கதியில் செல்லவிருப்பதால் மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக்கொள்வது நிச்சயமே. அதனால் விரைவில் தேர்தல் வரும்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு உரிய கிரகமான செவ்வாய், பகை வீட்டில் 17.09.2007 முதல் வக்கிரகதியில் செல்லவிருப்பதால், இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் காரணமாக அவர்களுக்கு மக்களிடையே ஆதரவு குறையும்.
கேள்வி : இதை தவிர்ப்பதற்கு இயலுமா?
பதில் : இதை தவிர்க்க பிரதமரை மாற்றலாம். ஆனால் அது நடக்காது. அடுத்த 2 வாரங்களில் கம்யூனிஸ்ட்டுகளை ஓரம்கட்டிவிட்டு தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராகிவிடும் என்று வித்யாதரன் கூறினார்.