ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது உள்ள கிரக அமைப்புகள், இவனுக்கு/இவளுக்கு இதுதான் என்று நிர்ணயித்து விடுகின்றன. படிப்பு இவ்வளவுதான், மனைவி இப்படித்தான், சாப்பாடு இவ்வளவுதான் என உதிக்கும் போதே விதிக்கப்பட்டு விடுகிறது.
எனவே உதிக்கும் போது நமக்கு விதிக்கப்பட்டது என்ன என்பதை (வாழ்க்கை சூட்சுமம்) அறிந்து அதற்கு ஏற்றவாறு வாரிசுகளுக்கு வாழ்க்கைத் துணையை பெற்றோர் அமைத்துத் தர வேண்டும். நம்மிடம் 10 வீடு உள்ளது, 25 பேருந்து ஓடுகிறது என்ற வகையில் அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்காது.
ஏனென்றால் மகனின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் பலவீனமாக இருந்தால் ஏழைக் குடும்பம், 10ஆம் வகுப்பு படித்த பெண்ணை மணமுடித்தால்தான் அவரது வாழ்க்கை இறுதிவரை சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு ஈனப் பெண்ணுடன் (படிப்பு, அந்தஸ்து, வசதி குறைந்த) வாழ வேண்டும் என்ற கிரக அமைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற ஒருவர், குறத்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அப்பெண் குறத்தி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கஷ்டப்பட்டு படித்து அரசு உத்தியோகத்தில் உள்ளார். பல பெண்களைப் பார்த்தும் மனதில் திருமண ஆசை தோன்றாத சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு, குறத்தி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கண்டதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளது.
அவர் இதுகுறித்து என்னிடம் கேட்கும் முன்பாகவே அவரது ஜாதகத்தை நான் (சிவில் சர்வீஸ் தேர்வின் போது) பார்த்துள்ளேன். அப்போதே அவருக்கு தகுதி, அந்தஸ்து, படிப்பு குறைவான பெண்தான் மனைவியாக வருவார் என்று தெரியும்.
திருமணம் குறித்து அவர் பலமுறை கேள்வி எழுப்பியும், புன்சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தேன். அவரும் முயன்றவரை முயற்சித்துப் பார்த்தார். இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம், முதலில் சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக முடியுங்கள் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
ஒரு சில மாதங்களுக்கு பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், இதுபோல் ஜாதி, அந்தஸ்து, படிப்பு குறைவான ஒரு பெண்ணை ஒருதலையாக விரும்புகிறேன். அவளை மணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார்.
என்னுடன் சகஜமாகப் பழகுபவர் என்பதால் அவரிடம் அதிக உரிமையுடன் சில விடயங்களை கேட்டேன். நீங்கள் இதுவரை எந்தப் பெண்ணையாவது மனைவியாக அடைய வேண்டும் என்று தோன்றியதுண்டா? கல்லூரியில் படித்த போதும், சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து பயிற்சி பெற்ற போதும் எத்தனை பெண்களை பார்த்திருப்பீர்கள். அப்போது உங்களுக்கு திருமணம் ஆசை வந்ததா? என்றேன்.
அதற்கு ஒரு சில வினாடிகள் யோசித்த பின்னர் பேசிய அவர், இதுவரை பல பெண்களுடன் பேசிப் பழகியிருந்தாலும், இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இவளைத்தான் மணம் செய்து கொள்ள வேண்டும் என தன் மனதில் தோன்றியதாக என்னிடம் கூறினார்.
அதே பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன். இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று அதே பெண்ணை மணம் முடித்த அவர், தற்போது மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
எனவே, ஒருவரைப் பார்த்ததும் அவர்/அவள்தான் எனது வாழ்க்கைத் துணை என்று தோன்றுவதைத்தான் பெரியவர்கள் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறி வந்துள்ளனர். முந்தைய ஜென்மத்தில் தம்பதியராக வாழ்ந்த ஒரு சிலருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அமையும்.
இயற்கையுடன் ஒன்றிவாழப் பழகு என்று கூறுவதும், கிரக அமைப்பின் இயற்கைத் தன்மையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அவரவர் கிரக அமைப்பின்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
இயற்கைக்கு (ஜோதிடம்) முரண்பாடாகவும், உறவினர்களை திருப்திப்படுத்தவும், அந்தஸ்து, ஜாதி பார்த்தும் செய்யப்படும் திருமணங்களால்தான் அதிகளவில் துர்மரணங்கள், கொலைகள், பிரிவு, முரண்பாடான உறவுகள், கள்ளத் தொடர்புகள் உருவாகின்றன.