சமீபத்தில் இரண்டு நடிகைகள், திருமணமாகி குழந்தைப் பெற்று 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நிலையில், விவாகரத்துக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். ஒரே துறையில் சிறந்து விளங்குவோர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் அதிகமான புரிதலுடன் நன்கு வாழ்வார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் திரைப்படத் துறையில் இருந்தவர்கள் இப்படி நீடித்து வாழ்வதில்லையே ஏன்?
க.ப. வித்யாதரன்: கலைக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதன் ஆதிக்கம் இருக்கும் போது பணம், புகழ், கெளரவம், படாடோபம் எல்லாம் வரும். சந்திரன், சுக்கிரன் கிரகங்கள் புகழோடு கூடிய பணத்தையும் தரக்கூடிய கிரகம். ஆனால் திருமண வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இவைகளின் செயல்பாடுகள் வேறு மாதிரி இருக்கும்.
நடிகையை திருமணம் செய்து கொள்ளும் ஒரு நபர், புகழக் கூடிய நபராக இருந்தால் அவரால் திருமண வாழ்க்கையை சமாளிக்க முடியும்.
சந்திரனும், சுக்ரனும் புகழுக்கு ஆசைப்படும் கிரகங்கள். குரு கிரகத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு புகழ் என்பதே பிடிக்காது. அதிகமாக ஒருவர் புகழ்ந்தாலே அவர்களிடம் குரு ஆதிக்கக்காரர்கள் உஷாராகி விடுவார்கள்.
சந்திரன், சுக்ரன் ஆதிக்கம் உடையவர்கள், புகழ்ந்தாலே அவர்களை பிடித்துவிடும். உங்க படம் 100 நாள் ஓடும், ஒரு பார்வை பாத்தீங்க பாருங்க என்பது போல் புகழ் கொண்டே இருக்க வேண்டும். இதுபோல கணவரும் புகழ வேண்டும்.
திரைத்துறையில் குறிப்பாக நடிகைகளை ஆட்டுவிப்பது இந்த சுக்கிரன்தான்.
சுக்கிரன்தான் திரைத்துறைக்கும், திருமண வாழ்விற்கும் உரிய கிரகம். எனவே திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கும் போது மண வாழ்க்கையை அது குறைத்துவிடும்.
ஒன்றை அளித்து ஒன்றை பிடுங்கிக் கொள்ளும். அதுதான் சுக்கிர தசை.
அப்புறம் ஏன் சுக்கிர தசை என்று சொல்கிறார்கள்?
அது திரைத்துறையை அல்லாதவர்களுக்கு.
திரைத் துறையை சார்ந்தவர்களுக்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் சுக்கிரன் திசை வரும்போது அவர்கள் திரைத் துறையில் புகழ்பெற்றால் குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
மற்றவர்கள் அதாவது பொறியாளருக்கோ, வழக்கறிஞருக்கோ சுக்கிர தசை நடக்கும்போது, ஏராளமான பணம் வரும். அதை வைத்து அவரது மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வதால் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
ஆனால் கலைக்குரிய கிரகமே கல்யாணத்திற்கும் உரியதாக இருப்பதால் கலையில் புகழ் பெறுபவர்கள் கல்யாணத்தில் தோல்வியை அடைவார்கள்.
இதற்கு பரிகாரம் என்ன?
ஏதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுதல். திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட வேண்டும். இல்லை, சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
சினிமாவிற்கு முழுக்குப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்ட நடிகைகள், சின்னத்திரையில் நடிக்கப் போனாலும் சுக்கிரன் தனது வேலையை காட்டிவிடும். குடும்ப வாழ்க்கையை கெடுக்க ஆரம்பித்துவிடும்.