பிறந்தநாளை தேதியில் கொண்டாடலாமா? நட்சத்திரத்தில் கொண்டாடலாமா?

திங்கள், 26 மே 2008 (16:34 IST)
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது சங்கக் காலத்தில் இருந்தே உள்ளது. மன்னர்கள் தங்கள் பிறந்த தினங்களில் மக்களுக்கு தங்கம், தானியம் எல்லாம் வாரி வழங்குவார்கள். தானியக் கிடங்குகளை திறப்பார்கள்.

ராஜ ராஜ சோழன், ஐப்பசி மாத சதய நாளில் பிறந்துள்ளார். அவர் பிறந்த நட்சத்திர நாட்களில்தான் சிறப்பான சேவைகைளை அவர் செய்துள்ளார். அதற்கு கல்வெட்டு சான்றுகளே உள்ளன.

அந்த காலத்தில் பிறந்த தேதியை கொண்டாடுவதில்லை. நட்சத்திரத்தைத் தான் கொண்டாடியுள்ளார்கள்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் அவருக்கு அது அதிக சக்தியைக் கொடுக்கும்.

தேதி என்பது முக்கியத்துவம் கிடையாது. நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டாடுவதுதான் சிறந்தது. நானும் எல்லோருக்கும் பிறந்த நட்சத்திரத்தன்று கோயில்களுக்குச் சென்று இறைவனை பூஜியுங்கள், இல்லாதவர்களுக்கு, அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு சென்று அவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை உதவுங்கள் என்று தான் கூறுகிறேன்.

ஆடைகள் கொடுப்பது, தேவையானப் பொருட்களை வாங்கியும் கொடுக்கலாம்.

தற்போது நட்சத்திர நாட்களில் கோயிலுக்குப் போய்விட்டு, இதுபோன்ற சேவைகளை செய்துவிட்டு, பிறந்த தேதியில் கேக் வெட்டிக் கொண்டாடுவது அதிகமாகிவிட்டது.

பிறந்த நட்சத்திர நாட்களில் நான்கு பேரை நமது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவளித்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதெல்லாம் நமது ஆயுளை வளர்க்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்