குழந்தை தத்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

சனி, 1 மார்ச் 2008 (19:09 IST)
பழைய நூல்களில் எல்லாம் இந்தந்த கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு தத்துப் பிள்ளை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. தசரத சக்ரவர்த்தி குழந்தை இல்லாமல் யாகம் செய்து, யாகத்தில் வந்த பாயசத்தை துணைவியர்கள் அருந்தி அதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோயிலில் யாகம் செய்ததற்கான கல்வெட்டு சான்றுகள்கூட உள்ளன. மேலும், இந்தந்த பாவங்கள் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

“புத்திரக் காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூன்யம் என்று செப்பிட” என ஒரு பாடல் சொல்கிறது.

தத்துப்பிள்ளை

குழந்தையை தத்தெடுத்த பெற்றோர்களைப் பார்த்தால், அந்த குழந்தை தத்தெடுத்தவர்களின் குணாதிசயங்களுடனேயே பிறந்து வளர்ந்திருக்கும்.

அதாவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்களுடைய வீட்டில் நாம் சாப்பிட்டுவிட முடியாது. அவர்களுடன் பூர்வ ஜென்மத்திலாவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அதுபோல தத்துப் பிள்ளை என்று சொல்லும்போது வாழ்நாள் முழுவதும் ஒருவரது வீட்டில் இருந்து அவர்களோடு இருக்க வேண்டுமானால் அந்த குழந்தை முன் பிறவியில் அவர்களுடன் ஏதாவது ரத்த தொடர்புடன் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் பெண் குழந்தையை தத்தெடுப்பது நல்லது. அது பயனுள்ளதாக இருக்கும். குரு புத்திரக் காரகன். குரு பலவீனமடையும்போதும், பூர்வ புண்ணியஸ்தானம் வலுவிழந்தாலோ குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே ஆணுக்குரிய கிரகம் வலுவிழக்கும்போது பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது.

உறவுகளுக்குள் தத்தெடுக்கக் கூடாது. என்ன உறவு என்றே தெரியாமல் எங்கோ பிறக்கும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது. உறவுக்குள் எடுத்தால் பலனளிக்காது. நட்புக்குள் எடுக்கலாம். ஆனால் இனம், மதம் மாறி எடுத்தால் நல்லது.

தத்தெடுக்கும்போது குறிப்பாக ஆண் குழந்தையாக இல்லாமல் இருப்பது நல்லது. எனினும் சிலருக்கு ஆண் குழந்தை ஏற்றது.

தத்தெடுக்கும் தம்பதிக்கு எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்குரிய பாலினத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

தத்தெடுக்கும் தம்பதியருக்கு குறைந்தது 35 வயது நெருக்கத்தில் இருக்கும். அடுத்தடுத்து அவர்களுக்கு என்னென்ன தசைகள் நடக்கின்றன என்பதை வைத்து, அவர்கள் எங்கு, எந்த மாவட்டத்தில், எந்த மாநிலத்தில் குழந்தை என்று பார்த்து தத்தெடுத்துக் கொள்ளலாம்.

தத்தெடுத்த குழந்தைக்கு பிறந்த தேதி தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போனால், குழந்தையை தத்தெடுத்து நமது வீட்டிற்கு அழைத்து வரும் நாளை அந்த குழந்தையின் பிறந்த தேதியாகக் கொண்டு ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்