எ‌ன்.ஆ‌ர்.ஐ. மா‌ப்‌பி‌ள்ளையா? ஜோ‌திட‌த்‌தி‌ன் ஆலோசனை!

Webdunia

வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:19 IST)
அயல்நாட்டில் பணியாற்றி வரும் நமது நாட்டு இளைஞர்கள் (NRI) ‌சில‌ர், இங்கு வந்து மணமுடித்துச் செல்லும் பெண்களை சிறிது காலத்திற்குப் பிறகு ஒதுக்கி வைத்துவிடுவது அல்லது புறக்கணித்துவிடுவது அல்லது விவாகரத்து செய்துவிடுவது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

இப்பிரச்சனையை ஆழமாக ஆராய அயலுறவு அமைச்சகத்தின் அயல்நாடு வாழ் இந்தியர் பிரிவு ஒரு சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. அக்குழுவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் அறிக்கை அளித்தது.

webdunia photoWD
அயல்நாடு வாழ் மாப்பிள்ளைகளுக்கு பெண் கொடுத்து சிக்கலிற்கு ஆளான பல குடும்பங்கள் காவல் நிலையத்தில் இருந்து தூதரக அலுவலகங்கள் வரை ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இப்பிரச்சனையைத் தீர்க்க ஜோதிட ரீதியான சாத்தியம் ஏதும் உள்ளதா என்று அறிய ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரனை அணுகினோம்.

கே‌ள்‌வி : அயல்நாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளைக்கு எந்த அடிப்படையில் (ஜோதிடப்படி) பெண் கொடுப்பது குறித்து முடிவு செய்வது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌‌ர் கே.‌பி. வித்யாதர‌ன் :

சென்னை நகரம் பூமத்திய ரேகையில் இருந்து 13.04 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் உள்ளது. அதற்கான ஈர்ப்பு சக்தி இங்கு பிறந்த வளர்ந்த பிள்ளைகளை ஒருவகையாக வளர்த்திருக்கும்.

தஞ்சாவூர் 10.47 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் உள்ளது. அங்குள்ள ஈர்ப்பு சக்தி மாறுபடும். அங்கு பிறக்கும் பிள்ளைகள் அதற்கேற்ற தன்மையுடன் இருப்பார்கள். ஒரே கிரகம் ஒரே நாளில் ஆதிக்கத்திலிருக்கும் போதுகூட, இடம் மாறுபடும்பொழுது ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் குணத் தன்மைகளும் வித்தியாசப்படும்.

ஒரு மாநிலத்திற்குள்ளேயே இந்த அளவிற்கு வேறுபடும்போது, அந்த அட்சாம்சம் மாறுவது போல உணவு, உடை, ஆடை அணிவது உள்ளிட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப பிணைப்பு ஆகியனவும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.

ஒரு கிரகம் 13.4 டிகிரி வடக்கில் உள்ள இடத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் மீது ஒருவிதமான கதிராற்றலை செலுத்துகிறது. அந்த இடத்தில் செலுத்தக் கூடிய ஆற்றலை அந்த மண் உள்வாங்கி அந்த குழந்தை மீது செலுத்துகிறது.

அதேபோல, தஞ்சாவூரில் அதே வேளையில் பிறக்கும் வேறொரு பெண் குழந்தையின் மீது அதே கிரகம் செலுத்தும் கதிராற்றலை அந்த மண் வேறுபட்டு உள்வாங்கி அக்குழந்தையின் மீது செலுத்துகிறது.

இப்படி ஒரு மாநிலத்திற்குள்ளேயே இத்தகைய மாறுபாடு இருக்கும்போது நாடு விட்டு நாடு செல்லும்போது அங்கிருக்கும் அட்ச ரேகை, தீர்க்க ரேகைகள் மாறுபடுவது போல, அங்கு பிறந்தவர்களுடைய தன்மைகளும் மாறுபட்டிருக்கும்.

இதனால் அவர்களுடைய மனோநிலை, குணநிலை மாறுபடும். கிரகங்களின் இயக்கம் இடத்திற்கு இடம் மாறுபட்டு அதன் செல்வாக்கை (மண்ணின் தன்மைக்கேற்றவாறு) செலுத்துகிறது.

webdunia photoFILE
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜனன ஸ்தானத்திற்கு 7ஆம் வீட்டுக் கிரகமோ அல்ல களத்திரக்காரனான சுக்கிரனோ 6, 8, 12ஆம் வீட்டிற்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போதோ அல்லது அந்தக் கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலோ அந்த பெண்ணிற்கு அயல் நாட்டில் பணி புரியும் மாப்பிள்ளை அமைந்தால் விவாகரத்தின்றி வாழ்க்கை சிறக்கும்.

இதேபோல ஆண் பிள்ளைகளிலும் சிலர் எவ்வளவுதான் படித்து திறன் பெற்றவர்களாக இருந்தாலும் நமது நாட்டில் உள்ளவரை அவர்களுடைய முன்னேற்றம் சற்றுகூட எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. அவர்கள் அயல்நாடு சென்றால் எதிர்பார்த்த அளவையும் தாண்டி நன்றாக பிரகாசிப்பார்கள். அவர்களுடைய ஜாதகம் அப்படிப்பட்டது. இதைத்தான்,
"அட்டமத்தான் திசை வரும் காலத்தில்
அன்னிய தேசத்தில் புகழ்பெருவான்
நட்டதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்" என்ற பாடல் கூறுகிறது.

நாடு விட்டு நாடு மாறினால் கிரகங்களின் செயல்பாடும் மாறும் என்பதையே இப்பாடல் விளக்குகிறது.

மகாகவி பாரதி சென்னையில் இருந்தபோது (13.04 டிகிரி வடக்கு) அவரை அலைக்கழித்த அதே கிரகம்தான், அவர் இங்கிருந்து புதுவைக்கு (11.56 டிகிரி வடக்கு) தப்பிச் சென்றபோது அதே கிரக நிலை அவர் அங்கு இருந்தவரை காப்பாற்றியது.

இதனை நன்கறிந்திருந்த காரணத்தினால்தான் அப்படிப்பட்ட ஜாதகம் கொண்ட இளைஞனை “எங்காவது ஒடிப்போய் பிழைத்துக்கொள்” என்று கூறியதற்கான காரணமாகும். கிரக நிலையும், மோசமான திசையும் நடக்கும்போது ஒரு நடைமுறைப் பரிகாரமாகவே வேறு அட்சாம்சம் உள்ள இடத்திற்கோ, நாட்டிற்கோ செல்லும்போது அந்த ஜாதகன் மோசமான நிலையில் இருந்து காப்பாற்றப்படுகிறான்.

மேற்குறிப்பிட்ட ஜாதகம் கொண்ட பெண்ணைத் தவிர மற்ற எந்த ஜாதகப் பெண்ணிற்கும் அயல் நாட்டில் பணி புரியும் மாப்பிள்ளை சரிப்பட்டு வராது.