மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளதாக அவர்மீது புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் அறிக்கை குறித்து பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதில் அவர் ” கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்!” என கூறியுள்ளார்.