அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சிலைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், காவி அவமதிப்புக்கான அடையாளம் என்கிறார் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம். எவ்வளவு தைரியம் பாருங்களேன். ஆனால் இதெல்லாம் தன் ஓனருக்கு தெரிந்துதான் பேசுகிறாரா என்பதே என் டவுட். அடுத்து வெளிமாநில சிலைகளுக்கு காவி போட்டால்தான் அவமதிப்பா? அவை தமிழகத்துக்குள் நடந்தால் உங்கள் அவமதிப்பு அப்ளை ஆகாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.