ஜல்லிக்கட்டு வேண்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். அப்போது சிலர் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்திருந்ததாக கூறப்பட்டது. அந்த புகைப்படத்தை பா.ஜ.க. வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவு செய்திருந்தார்.
மேலும், சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதுபற்றி பேசினார். அதனால் தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனக்கூறினர். ஆனால், அதன்பின் அந்த புகைப்படத்திற்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தி வெளியானது. எனவே இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என ஓ.பி.எஸ் சட்டசபையில் பின்வாங்கினார்.
இந்நிலையில், போலீசாரின் விசாரனையில் பின்லேடன் புகைப்படம் பொறித்த இருசக்கர வாகனத்தில் சென்றது இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவுதீன் மற்றும் மாபாஷா என்பது தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம், தேசிய லீக் கட்சியின் சார்பில், நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களிம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.