இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இத்திட்டத்தில் பெண்களுக்கு இருச்சக்கர வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 சி.சி.க்கு மிகாமல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட புதிய, மாசு ஏற்படுத்தாத வாகனமாக இருக்க வேண்டும். அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் வினியோகிகப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக் கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பத்துடன் பணிபுரிவதற்கான சான்றுகள், ஓட்டுநர் உரிமம், இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுசான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி நாளை முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.