நாளை மக்கள் ஊரடங்கை செயல்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு பேருந்து, ரயில் வசதிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களிடையே தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு, மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாளை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகளும் நாளை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளும் சேவையை நிறுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
ஏற்கனவே வணிகர்கள் சங்க கூட்டமைப்பு நாளை முழு கடை அடைப்பு நடத்தி ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.