தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் வந்தவாறு இருக்கிறது. இந்நிலையில் அவரது டெல்லி முகாம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயபாஸ்கர் வீடு, குவாரிகள், அலுவலகங்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அவர் மீதான பிடியை இறுக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் குட்கா போதை பொருள் விற்பனைக்கு லஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அமைச்சர் அங்கேயே முகாமிட்டார். நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சரை பார்க்க சென்றதாக கூறப்பட்டது. ஆனால் நீட் விலக்கு வந்ததாக இல்லை. இதனால் அமைச்சர் தனது பதவியை தக்க வைக்க டெல்லி சென்றதாக பரவலாக பேசப்பட்டது.
இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியபோது, தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் கருப்பு கண்ணாடி போட்டுள்ளதால் அவரது கண்ணுக்கு அனைத்தும் கருப்பாக தெரிகிறது என சாடினார். மேலும் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து பாஜகவை சாடிய வைகோவையும் விமர்சித்தார் தமிழிசை.