தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்ன? தடைகள் என்ன? – விரிவான விளக்கம்
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:16 IST)
தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதாமாதம் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி
சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதி
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
தமிழ்நாட்டில் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி. பார்சல் சேவை ஏற்கனவே உள்ளது போன்று, இரவு 9 மணி வரைத் தொடரும்
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி
வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்
மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்
தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும். கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு
சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் தளர்வற்ற முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் ரத்து செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்
மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.