பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் அதிமுக, திமுக, காங்கிரஸ் – எதற்காக தெரியுமா?
சனி, 6 ஜூலை 2019 (08:44 IST)
நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் திமுக ஒரு விஷயத்தை வலியுறுத்த அதற்கு அதிமுகவும், காங்கிரஸும் இணைந்து கொள்ள “நாம் எல்லாரும் சேர்ந்து இதை செய்வோம்” என்று மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கின்றன.
சட்டசபை கூட்டத்தில் நேற்று பல விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் “சேலம் உருக்காலை திட்டம் அண்ணாவின் கனவு திட்டம். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அடிக்கல் நட்டு திறந்து வைத்தது. தற்போது சிலபல காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலையை மத்திய பாஜக அரசு தனியாருக்கு விற்க முயற்சி செய்கிறது. இதற்கான டெண்டர் ஆக்ஸ்டு 1ல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசின் இந்த விரோத போக்கை தடுத்து நிறுத்த முதல்வர் பழனிச்சாமி பிரதமரை சந்தித்து பேச வேண்டும். முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக எம்.பிக்கள் வர தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த திட்டத்தை கொண்டு வர இருந்தார்கள். அப்போதே நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இப்போது எதிர்க்கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார். பத்திரிக்கைகளிலும் செய்தி வந்திருக்கிறது.
எனவே நீங்கள் சொன்னது போல திமுக எம்.பிக்களோடு சேர்ந்து அதிமுக எம்.பிக்களும் பிரதமரை சந்தித்து பேச தயாராக இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கு இந்த பொதுப்பணித்துறை எவ்வளவு முக்கியம், இதை டெண்டர் விடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை ஒரு அறிக்கையாக தயார் செய்து பிரதமரையும், சம்பந்தபட்ட அமைச்சர்களையும் சந்தித்து ஒன்றாக வலியுறுத்துவோம். மேலும் நாடாளுமன்ரத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவோம்” என கூறியுள்ளார். அதற்கு காங்கிரஸ் எம்.பிக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளும் ஒருமனதாக இந்த பிரச்சினையை ஏற்றுக்கொண்டதும், ஒன்றிணைந்து தீர்வு காண இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.