பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பாண்மையோடு வெற்றி பெற்ற மோடி இரண்டாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பாஜகவின் கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதனம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தமிழக கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் அமைச்சரவையில் தமிழர்கள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியபோது ‘இன்னும் வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும். இன்னும் பல மாநிலங்கள் வெற்றிகளைக் குவிக்க இருக்கின்றன. தமிழகத்தில் கட்சி பலம் பெறும்போது அதிக பிரதிநிதித்துவம் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.