வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய அப்டேட்டில் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தென்கிழக்கே 900 கிமீ தொலைவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. இது நாளை காலை தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தாக்கும். இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வைத்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி கனமழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளதுடன் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாளை மறுநாள் 9 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யும் என கணிப்பு.