மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி உயர கொடிக்கம்பம் ஏற்ற அனுமதி கொடுத்த வருவாய் ஆய்வாளர் அனிதா என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே வெளிச்சநத்தம் என்ற கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 25 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் இருந்த இடத்தில், அதை 45 அடியாக உயரமாக மாற்றியுள்ளனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, நேற்று வருவாய் ஆய்வாளர் அனிதா அனுமதி கொடுத்ததாகவும், இதனை தொடர்ந்து 45 அடி உயர கொடி கம்பம் ஏற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொடிக்கம்பத்தை மாற்றியதனை தடுக்க தவறிய காரணத்தால், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், மற்றும் கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, சம்பந்தப்பட்ட கிராமத்திலும், மாநில அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.