விக்கிரவாண்டியும், நாங்குநேரியும் தேர்தல் பிரச்சாரங்களால் களேபரமாகி வருகிறது. ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி இரு தொகுதிகளிலிம் சூறாவளிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரியில் முகாமிட்டுள்ள ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது ‘எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் ஆனவர். அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொகுதியில் போட்டியிடட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னுடன் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாரா?. அப்போது தெரியும் மக்களின் முதல்வர் யார் என்று’ என சவால் விடுக்கும் விதமாகப் பேசினார்.
அதற்குப் பதிலளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ எந்த சவாலையும் ஏற்க நாங்கள் தயார். ஸ்டாலின் தற்போது குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார். அதனால், அவர் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. 2021 தேர்தல் வரை கூட பொறுக்க முடியாமல் பதவி ஆசை பிடித்து அவரை பாடாய் படுத்துகிறது.’ எனக் கூறியுள்ளார்.