சில்லறை தட்டுப்பாட்டால் இலவசமாக உணவு வழங்கும் ஹோட்டல்

வியாழன், 10 நவம்பர் 2016 (17:04 IST)
பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் அவதிப்படுவதை அறிந்து நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று இலவசமாக உணவு அருந்தலாம் என அறிவித்துள்ளது.


 

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை [08-11-16] பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின், பெரும்பாலான கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து விட்டனர்.

ஆனால், நெல்லை NGO காலனியில் ஸ்ரீபாலாஜி ஹோட்டல் பொதுமக்கள் நலன் கருதி உணவு அருந்தும் பொதுமக்களிடம் காசு வாங்க மறுத்துள்ளனர்.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்கையில், “500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற மாட்டோம். ஆனால் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சாப்பிட்டுச் செல்லுங்கள். பிறகு எப்போது வேண்டுமானாலும் வந்து கொடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்