தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் பேச்சுகள் சர்ச்சையாகும் அதே சமயம் அதை விட அதிக ட்ரெண்டிங் ஆவது என்றால் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்தது குறித்து சொல்லும் செய்திகள்தான். இதற்கு முன்னர் ஆமைக்கறி சாப்பிட்டது, அரிசி கப்பலை சுட்டது என அவர் பேசிய பல சம்பவங்கள் சர்ச்சையான நிலையில், தற்போது கறி இட்லி கருத்து வைரலாகி வருகிறது.
ஒரு யூட்யூப் சேனலுக்கு சீமான் அளித்த பேட்டியில் பிரபாகரனை சந்திக்க சென்றபோது அவர் இட்லி அளித்ததாகவும் அதை பிளந்து பார்த்தபோது உள்ளே கறி இருந்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை விமர்சிக்கும் பலர் ”சீமான் பிரபாகரனை சந்தித்தது குறித்து எப்போது பேசினாலும் உணவு குறித்தே பேசுகின்றார்” எனவும், அவர் சொன்ன இட்லி குறித்தும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர், சீமான் சொன்னது உண்மை எனவும், இலங்கையில் இட்லிக்குள் கறி மசாலா வைத்து சமைக்கும் முறை உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர். “கீமா இட்லி” என்றழைக்கப்படும் இந்த இட்லியை செய்வது குறித்த வீடியோவையும் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கள் பலவற்றில் கீமா இட்லி குறித்த பேச்சாகவே உள்ளது.