டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்: சசிகலா

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (14:03 IST)
டி.ஐ.ஜி. விஜயகுமார் அவர்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்து கொண்டதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்களின் மறைவு தமிழக காவல்துறைக்கு பேரிழப்பாகும். 
 
கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற டிஐஜி விஜயகுமார் அவர்கள், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்த நிலையில், இன்று காலையில் நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது முகாம் அலுவலகத்திற்கு திரும்பிய நிலையில் திடீரென்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. 
 
இது போன்று உயர் பதவியில் இருக்கின்ற ஒரு காவல் அதிகாரி தனது இயல்பான பணிகளை செய்து வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அனைவரும் கருதுகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு உரிய விசாரணையை மேற்கொண்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் அவர்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
டி.ஐ.ஜி.விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய காவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்