தினகரனுக்கு ஆதரவாக சசிகலா புஷ்பா!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:07 IST)
அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தற்போது தினகரனுக்கு ஆதரவான சில கருத்துக்களை கூறியுள்ளார்.


 
 
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, மக்களுக்காகப் போராடும் அரசியல்வாதிகள் யாரும் தமிழகத்தில் இல்லை எனவும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் விலக சிபிஐ விசாரணை கட்டாயம் வைக்க வேண்டும் என்றார்.
 
மேலும் தினகரன் அரசியலில் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கக்கூடிய திறமையுள்ளவராக உள்ளார். பொதுக்குழுவில் முதலமைச்சர் தினகரனை ஒருமையில் பேசியிருக்கக் கூடாது. அமைச்சர்கள் அவரவர் உரிமைக்காகப் போராடுகின்றனர். மக்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்குத் தைரியமான அரசியல்வாதி தேவை என்றார்.
 
சசிகலா புஷ்பா தினகரனை புகழ்ந்தும் முதல்வர் அவரை ஒருமையில் பேசியிருக்க கூடாது என கூறியதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா தன்னை தாக்கியதாக நாடாளுமன்றத்தில் முழங்கிய சசிகலா புஷ்பா சசிகலாவுக்கு எதிராக பல கருத்துக்களை கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், அவர் மரணமடைந்த பின்னரும் சசிகலா புஷ்பா தீவிர சசிகலா எதிர்ப்பில் இருந்தார். ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னரே சசிகலா புஷ்பா சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆக கூடாது எனவும் அது கட்சி விதிமுறைப்படி செல்லுபடி ஆகாது எனவும் முதலில் தேர்தல் ஆணையத்தை அனுகியது சசிகலா புஷ்பாதான். இந்நிலையில் தற்போது அவர் சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரனுக்கு ஆதரவான பேசியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்