மக்கள் அதிமுக: சசிகலா புஷ்பாவின் நெக்ஸ்ட் மூவ்

சனி, 6 ஆகஸ்ட் 2016 (13:11 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியே வந்து சந்திரகுமார் எப்படி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினாரோ, அதேப்போல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவும் அடுத்ததாக மக்கள் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டதால் அவர் தனியாக இருந்து அரசியலில் ஜொலிக்க முடியுமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்தால் அவரது அரசியல் எதிர்காலம் ஒருவேளை பிரகாசமாக வாய்ப்பு உள்ளது.
 
இந்நிலையில் அவர் தற்போது வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி எம்.பி. பதவியை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் சசிகலா புஷ்பாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 
இதனையடுத்து சசிகலா புஷ்பா டெல்லியில் பெரிய பெரிய வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில், மக்கள் தேமுதிக உருவாகி பின்னர் திமுகவுடன் இணைந்ததை போன்று, மக்கள் அதிமுகவை தொடங்கி, பின்னர் வேறு ஒரு கட்சியில் சேரலாம் என பேசியதாக கூறப்படுகிறது.
 
சசிகலா புஷ்பாவை பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படும் அந்த மணல் அதிபரும் சசிகலா புஷ்பாவின் மக்கள் அதிமுக பிளானுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்