ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று சசிகலாவிடம் கோரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகிகள் தற்போது அவரை யார் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியையும் ஆட்சியையும் சின்னம்மா சசிகலாவால் மட்டும்தான் வழிநடத்த வேண்டும் என அனைத்து அதிமுக நிர்வாகிகளும் சசிகலா புகழ்பாடியது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக தனக்கென்று ஒரு அணியை உருவாக்கினார்.
அதன்பின் சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தினகரன் சிறைக்கு சென்று வர முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
இதையடுத்து தினகரன் பக்கம் சில அதிமுக நிர்வாகிகள் சென்றனர். மூன்று அணிகளாக அதிமுக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி அணியினர் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினர். ஓபிஎஸ் அணியின் கோரிக்கையில் ஒன்றான ஜெயலலிதா மறைவுக்கு குறித்து விசாரணை கமிஷனை முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
இதையடுத்து இரு அணிகளும் தற்போது இணைந்துள்ளனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டனர். இருந்தாலும் தற்போதுவரை சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக சின்னம்மா என்ற வார்த்தை தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவிர வேறு யாரும் அதிமுகவில் கூறுவதில்லை. தற்போது அதிமுகவில் சசிகலாவின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.