சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த மரணம் குறித்து பல முரண்பட்ட தகவல்களும் வந்தன.
தற்போது வரை ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நடைபெறாமல் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ராம்குமார் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற விபரம் வெளிவந்துள்ளது.
அதில், சிறையில் டிஸ்பென்சரி இருக்கும் பகுதியில் உள்ள அறையில்தான் ஜூலை 4-ஆம் தேதி முதல் ராம்குமார் வைக்கப்பட்டிருந்தார். சம்பவம் நடந்த அன்று மாலை 4.30 மணிக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என ராம்குமார் கேட்டதால் வார்டன் பேச்சுமுத்து சிறைக்கதவை திறந்துவிட்டுள்ளார்.
வெளியேவந்த ராம்குமார், திடீரென்று அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை பலமாக உடைத்து, அதில் இருந்த மின் கம்பியை இழுத்து தனது பற்களால் கடித்தார். அதைப்பார்த்த வார்டன் பேச்சிமுத்து, ஓடிவந்து லத்தியால் அடித்து அவரைக் காப்பாற்ற முயன்றார். பின்னர் ராம்குமார் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்த வார்டன் பேச்சுமுத்து சிறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், பணியிலிருந்த சிறை மருத்துவர் ராம்குமாருக்கு முதலுதவி கொடுத்துள்ளார்.
ராம்குமாரின் நிலை மிக மோசமாக இருந்ததால் அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயப்பேட்டையில், ராம்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.