சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரின் வழக்கறிஞராக செயல்படும் ராம்ராஜ், வழக்கிலிருந்து திடீரென்று விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடக்கம் முதலே மர்மங்கள் நீடித்து வரும் இந்த வழக்கை ராம்குமாரின் சார்பில் ராம்ராஜ் என்ற வழக்கறிஞர்தான் சந்தித்து வருகிறார். அதோடு ராம்குமார் நிரபராதி என்றும், அவர் கைது செய்யப்பட்ட போது போலீசார்தான் அவரின் கழுத்தை அறுத்தனர் என்பது முதல் பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறிவந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து அவர் விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது சுவாதி வழக்கில் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராம்குமாருக்கு ஆதரவாக பேசி வந்த திலீபன் மகேந்திரன் என்ற வாலிபர் நேற்று இரவு, திருவாரூர் நீதிமன்றத்தின் அருகிலேயே மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.