காலா படப்பிடிப்புக்கு இடையிலும் தொடரும் ரஜினியின் அரசியல் நகர்வுகள்: காத்திருக்கும் ஜி.கே.வாசன்!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (09:44 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலுக்கு வர இருப்பது குறித்து சூசகமாக சில கருத்துக்களை கூறி சென்றார். இதனையடுத்து தமிழக அரசியலில் ஒரே ரஜினி பற்றிய பேச்சு தான்.


 
 
அதன் பின்னர் தனது காலா கரிகாலன் படத்திற்கான படப்பிடிப்புக்கு மும்பை சென்று விட்டார் ரஜினி. இதனால் ரஜினியின் அடுத்தக்கட்ட அரசியல் அறிவிப்பு குறித்து அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
இந்நிலையில் பிஸியான காலா படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரஜினி தனது அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மும்பையின் பல இடங்களில் காலா கரிகாலன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.
 
படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் சென்னையில் தான் ஏற்கனவே அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியவர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறாராம். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடனும் மும்பையில் இருந்து ரஜினிகாந்த் தொலைப்பேசியில் ஆலோசித்ததாக மும்பை பத்திரிகைகள் கூறுகின்றன.
 
இருவரும் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும், விரைவில் சென்னை திரும்பியதும் சந்திக்கலாம் என சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன். ஆனால் அதற்குள் நீங்கள் மும்பை வர வாய்ப்பிருக்கிறதா என ரஜினி கேட்டதாக கூறப்படுகிறது. விரைவில் ரஜினி, ஜி.கே.வாசன் சந்திப்பு நடைபெறும் என்கிறது அரசியல் வட்டாரம். முன்னதாக சென்னையில் தனது வீட்டுக்கு தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜாவை ரஜினி அழைத்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்