தமிழக மக்களுக்கு இன்ப செய்தி - கொட்டப்போகுது மழை

வியாழன், 12 மே 2016 (15:40 IST)
இன்னும் இரண்டு நாட்களில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் வருகிற 5ஆம் தேதி தொடங்கியது. இது மே 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், உலகம் முழுவதும் கடந்த 100 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறியிருந்தனர்.
 
இதனால், அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால், சென்னையில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது.
 
மேலும், திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, தாராபுரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது ஓரளவு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அதாவது வரும் 14ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இது இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அவ்வாறு தாழ்வு நிலை உருவாகும் பட்சத்தில் அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக உருவாகும். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்