போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு வகுப்புகள்: அரசுக்கு ஐடியா கொடுக்கும் டிடிவி!

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:09 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்  அரசு பேருந்துகளில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து வருத்தம். 
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் மீனவ பெண் ஒருவர் வைத்திருந்த கூடையில் நாற்றம் வருவதாக கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வரை சென்றதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீனவப் பெண்ணை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனைத்தொடர்ந்து நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நடுவழியில் நரிக்குறவர்கள் சிலர் இறக்கிவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை அரசு பேருந்து நடத்துனர் கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். ஆனால் அங்கு இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.  
 
இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தமிழக அரசு அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும், அவர்களுக்கு இருக்கிற சமூக பொறுப்பு குறித்தும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
 
இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்