ராம்குமாரை சிலர் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் : மனோதத்துவ நிபுணர் பகீர் தகவல்
புதன், 21 செப்டம்பர் 2016 (12:24 IST)
ராம்குமார் மரணம் குறித்து, சிறையில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வந்த மனோதத்துவ நிபுணர் கூறிய தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18ம் தேதி, சமையல் அறைக்கு அருகில் இருந்த மின் கம்பியை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், அவரின் மரணம் குறித்து தெளிவான விளக்கங்களை போலீசார் தரப்பில் இன்னும் கூறப்படதாதால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. மேலும், ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ராம்குமாரை கைது செய்த போது, அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அவருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிறையில் ராம்குமாருக்கு மனநல அறிவுரைகள் வழங்கிய ஒரு மனோதத்துவ நிபுணர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளர்.
அவர் கூறிய போது “ ராம்குமார் யாரிடமு மனம் விட்டு பேசமாட்டார். வாரம் ஒரு முறை நான் அவரை சந்தித்து அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வந்தேன். என்னிடமும் சரியாக பேசமாட்டார். நான் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார்.
ராம்குமார் ஒருவேளை தற்கொலை செய்து கொண்டிருந்தால், அவரை சிலர் தூண்டியிருக்கலாம். சில கைதிகள் அவரை பயமுறுத்தியிருக்கலாம். மாஜிஸ்திரேட்டு விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” என்று கூறியுள்ளார்.