வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
இந்நிலையில் மதனை தேடும் முயற்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர் சிவா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வாரனாசி சென்றுள்ளனர். இவர்கள் தற்போது மதன் தங்கியிருந்த ஹோட்டல் அறையை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு மதன் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் ஹோட்டல் அறையில் இருந்தன.
இந்தநிலையில் மதன் மீது பண மோசடி செய்ததாக பல புகார்கள் குவிந்தன. இவரது பண மோசடியில் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கும் பங்கிருப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மதன் மீது புகார் அளித்தார். அதில் எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி மதன் பண மோசடி செய்துள்ளார் என்றும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மதன் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததை அடுத்து மதனைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது அம்மா மற்றும் மனைவி போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் மதனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.