சண்டை போட்டா 1330 திருக்குறள் எழுதணும்! – காவல் ஆய்வாளர் கொடுத்த தண்டனை!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (21:18 IST)
திருநெல்வேலி அருகே மோதலில் ஈடுபட்ட மாணவர்களை 1330 திருக்குறளை எழுத சொல்லி காவல் ஆணையர் தண்டனை அளித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சமீப காலமாக திருக்குறளும், திருவள்ளுவரும் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றனர். அப்படி திருக்குறளை மையப்படுத்திய சம்பவம் ஒன்று திருநெல்வேலியில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று உள்ளது. அதில் படிக்கும் மாணவர்கள் தங்கள் நண்பன் ஒருவனின் பிறந்தநாளை கொண்டாட அருகில் உள்ள வ.உ.சி மைதானத்தில் கூடியுள்ளனர். அப்போது அங்கு வந்த வேறு பள்ளி மாணவர்களுக்கும், இவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுற்றியுள்ளவர்கள் சண்டையை தடுத்து விட்டதால் இரு குழுவும் கலைந்து சென்றுள்ளனர்.

எனினும் மறுநாள் ஒரு அணியினை தாக்க மற்றொரு பள்ளி மாணவர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இரு பள்ளியை சேர்ந்த மாணவர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து இரு அணியையும் சமாதானம் செய்த போலீஸார் அவர்கள் மேல் வழக்கு பதியாமல் இருக்க வேண்டுமென்றால் 1330 திருக்குறளையும் எழுதி காட்ட வேண்டும் என தண்டனை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 49 மாணவர்கள் நாள் முழுக்க காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து 1330 திருக்குறளை எழுதி காட்டியிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளார் பாளையங்கோட்டை காவல் ஆணையர் தில்லை நாகராஜன்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்